கல்லூரி மாணவர்களுக்கு விற்க முயற்சி ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் வெளிநாட்டினர் உள்பட 3 பேர் கைது


கல்லூரி மாணவர்களுக்கு விற்க முயற்சி ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் வெளிநாட்டினர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2018 3:03 AM IST (Updated: 3 Nov 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு விற்க முயன்ற ரூ.1½ கோடி போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வெளிநாட்டினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

இதுதொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெங்களூரு நகரில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் பானசவாடி அருகே காச்சரக்கனஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக் குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு போலீசார், காச்சரக்கனஹள்ளி 3-வது கிராசில் உள்ள வீட்டில் இன்று (அதாவது நேற்று) சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வீட்டில் போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. இதுதொடர்பாக தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பெய்த் சாக்ஸ் (வயது 34), கிழக்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த கன்டி ஹென்ட்ரி (24) மற்றும் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்த பிரதீக் ஷெட்டி (29) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பிரதீக் ஷெட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். அவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார்.

காச்சரக்கனஹள்ளியில் வாடகைக்கு வீடு எடுத்து கன்டி ஹென்ட்ரி தங்கி இருந்துள்ளார். இவரும் பெய்த் சாக்சும் சேர்ந்து கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு போதைப்பொருட்கள், போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நைஜீரியா நாட்டை சேர்ந்த சிலரும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். பெய்த் சாக்ஸ், கன்டி ஹென்ட்ரிக்கு உதவியாக பிரதீக் ஷெட்டி இருந்துள்ளார். மேலும் பெய்த் சாக்ஸ், கன்டி ஹென்ட்ரி தொழில் தொடர்பான விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளனர்.

ஆனால் அவர்கள் 2 பேரும் எந்தவொரு தொழிலும் செய்யாமல் வீட்டில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர். கைதான 3 பேரும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பதற்காக பதுக்கிவைத்திருந்த 1½ கிலோ எடை கொண்ட கொகைன், 1,850 போதை மாத்திரைகள், ஒரு கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 52 லட்சம் ஆகும். கைதான 3 பேர் மீதும் பானசவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் உடன் இருந்தார். கைதான 3 நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், போதை மாத்திரைகள் ஆகியவை நேற்று மாலையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் சுனில்குமார் மற்றும் கூடுதல் போலீஸ் கமிஷனர் அலோக்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story