சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி மதுரை தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் செல்போன்களை பறித்து கொண்டு தப்பி ஓட்டம்
சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறி தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையடிக்க முயன்ற 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை,
மதுரை தெற்குவெளி வீதி பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு நேற்று மாலை ஒருவர் நகை அடகு வைக்க வந்துள்ளார். அவரிடம் அங்கிருந்த பணியாளர் நகை அடகு வைக்க அடையாள அட்டை ஏதாவது வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே அவர் வண்டியில் வைத்துள்ள அடையாள அட்டையை எடுத்து வருவதாக கூறி விட்டு அங்கிருந்து சென்றார்.
பின்னர் அவர் திரும்பி வந்தபோது மேலும் 4 பேர் உடன் வந்தனர். அவர்கள் நேராக மேலாளர் காமாட்சியிடம் (வயது 30) சென்று நாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் அங்குள்ள நிதி நிறுவன கணக்குகளை சரி பார்ப்பது போல் நடித்துள்ளனர். பின்னர் லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்க்க வேண்டும், அதனால் லாக்கர் சாவியை தருமாறு கேட்டனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மேலாளர் லாக்கர் சாவியை கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது வாடிக்கையாளர்கள் 2 பேர் அங்கு வந்தனர். அந்த நேரத்தில் மேலாளர் காமாட்சி விரைந்து செயல்பட்டு அங்குள்ள எச்சரிக்கை அலாரத்தை அழுத்தினார். திடீரென்று அலாரம் சத்தம் கேட்டதால் பயந்து போன அவர்கள் அங்கு பணிபுரியும் 5 பேரின் செல்போன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் 3 செல்போன்களை பறித்து கொண்டு தப்பி விட்டனர். உடனே அங்கிருந்து வாடிக்கையாளர் ராம்குமார் தெற்குவாசல் போலீஸ் நிலையத்திற்கு விரைந்து சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.
இதற்கிடையில், அலாரம் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தெற்குவாசல் போலீசார் நடந்த சம்பவம் குறித்து மேலாளர் காமாட்சியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொள்ளையர்கள் தொப்பி அணிந்திருந்ததால் முகம் சரியாக தெரியவில்லை என்றார்.
பின்னர் போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் கொள்ளையடிக்க வந்தவர்கள் எந்த வாகனத்தில் வந்தார்கள் என்பது குறித்தும் அந்த பகுதியில் விசாரணை நடத்தினர். இது குறித்து தெற்குவாசல் போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story