சிதம்பரத்தில் மழை: பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது - பரோட்டா மாஸ்டர் உயிர் தப்பினார்


சிதம்பரத்தில் மழை: பஸ் நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது - பரோட்டா மாஸ்டர் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 3 Nov 2018 3:30 AM IST (Updated: 3 Nov 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் பெய்த மழையால், பஸ்நிலைய கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் அந்த பகுதியில் ஓட்டலில் வேலை பார்த்த பரோட்டா மாஸ்டர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

சிதம்பரம், 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சிதம்பரம் பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு கூடம் உள்ளது. இந்த கட்டிடம் பழமைவாய்ந்த ஒன்றாகும். மேலும் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. சிதம்பரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக கட்டிடத்தின் சுவரில் தண்ணீர் இறங்கிய நிலையில் இருந்தது.

நேற்று காலை சிதம்பரம் பகுதியில் பெய்த கனமழைக்கு, கட்டிடம் தாக்கு பிடிக்க முடியாமல் அதன் ஒரு பகுதி மட்டும் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். மேலும், கட்டிடம் இடிந்து விழுந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு ஓட்டல் மீதும் விழுந்தது. இதில் அங்கு பரங்கிப்பேட்டை அரிய கோஷ்டி பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டர் வெங்கடேசன்(வயது 30) கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கி கொண்டார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வெங்கடேசனுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கட்டிடம் இடிந்தது பற்றி அறிந்த சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா பஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். கட்டிடம் இடிந்து விழுந்து பரோட்டா மாஸ்டர் உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story