பி.டெக். பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார்
வி.ஐ.டி.யில் பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்ப வினியோகத்தை வேந்தர் ஜி.விசுவநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வி.ஐ.டி.யின் வேலூர், சென்னை, ஆந்திரா மாநிலம் அமராவதி மற்றும் மத்திய பிரதேச மாநிலம் போபால் வளாகங்களில் 2019-ம் ஆண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வு விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று முதல் தொடங்கியது. வேலூர் தலைமை தபால் நிலையத்தில் விண்ணப்ப படிவ விற்பனையை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வி.ஐ.டி.யின் வேலூர் வளாகத்தில் பி.டெக். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் உள்பட 17 பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதேபோல் சென்னை, ஆந்திரா, போபால் வளாகத்திலும் பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை ஆன்லைன் முறையில் இந்தியாவில் உள்ள 124 முக்கிய நகரங்களிலும் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ள 175 மையங்களிலும் இந்த நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
நுழைவுத்தேர்வு விண்ணப்ப படிவங்கள் வேலூர் உள்பட நாட்டில் உள்ள 22 முக்கிய நகரங்களில் உள்ள தலைமை தபால்நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்ப கட்டணத்தை ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலை செலுத்தியோ பெற்றுக்கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.vit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி கடைசி நாளாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் நாராயணன், யு.ஜி அட்மிஷன் இயக்குனர் மணிவண்ணன், வேலூர் கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், தலைமை தபால் நிலைய அதிகாரி கோமல்குமார், உதவிகண்காணிப்பாளர் ராஜகோபலன், தபால்துறை மக்கள் தொடர்பு ஆய்வாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story