பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள் மீது தடியடி


பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள் மீது தடியடி
x
தினத்தந்தி 3 Nov 2018 4:30 AM IST (Updated: 3 Nov 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

பாந்திராவில் நடிகர் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

மும்பை,

இந்தி நடிகர் ஷாருக்கான் நேற்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிகாலை முதலே மும்பை பாந்திராவில் உள்ள அவரது மன்னத் இல்லத்தின் வெளியே ரசிகர்கள் திரள தொடங்கினார்கள். நேரம் செல்ல, செல்ல ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமானது.

அவர்கள் ஷாருக்கானை பார்த்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக கால் கடுக்க வெயிலில் காத்து நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், மாலை 4 மணியளவில் ஷாருக்கான் தனது மகனுடன், வீட்டில் உள்ள மாடத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் ஷாருக்கானை பார்க்கும் ஆவலில் முண்டியடித்து கொண்டு சென்றனர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு உண்டானது. அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நிலைமையை கட்டுப்படுத்த ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள்.

ரசிகர்கள் ஓட்டம் பிடித்ததில், அவர்களது காலணிகள் கழன்று சாலையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ஷாருக்கான் வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story