ஆரல்வாய்மொழி அருகே குளத்தில் மூழ்கி வியாபாரி சாவு


ஆரல்வாய்மொழி அருகே குளத்தில் மூழ்கி வியாபாரி சாவு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:30 AM IST (Updated: 3 Nov 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே வியாபாரி குளத்தில் மூழ்கி இறந்தார்.

ஆரல்வாய்மொழி,
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 42). இவர் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு அனிதா தேவி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

வடிவேலுக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வடிவேல் காலை கடனை முடித்து வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இரவு வெகு நேரம் ஆகியும் வடிவேல் வீடு திரும்பாததால், அவரை அனிதா தேவி தேடி வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை சுப்பிரமணியபுரத்தில் உள்ள தோவாளை பெரிய குளத்தில் ஒருவர் பிணமாக மிதந்தார். இதை பார்த்தவர்கள் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, உடலை மீட்டு பார்த்த போது, அது வடிவேல் என்று தெரிய வந்தது.

வடிவேல் கால் கழுவுவதற்காக குளத்தில் இறங்கிய போது தவறி விழுந்து, தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story