கோவை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை: கழிவறையில் வீசப்பட்ட லஞ்சப்பணம் - விசாரணையில் திடுக்கிடும் தகவல்
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கிருந்த ஊழியர்கள் சிலர் லஞ்சப்பணத்தை கழிவறையில் வீசியது விசாரணையில் தெரிய வந்தது.
கோவை,
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் பணம் வசூல் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதும் ரூ.44 லட்சம் சிக்கியது. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் தீபாவளியையொட்டி ஊழியர் களுக்கு லஞ்சமாக பணம் கொடுக்கப்படுவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த வாகன ஆய்வாளர் பாபு(வயது 52) மயங்கி விழுந்து மாரடைப்பால் மரணம் அடைந்தார்
முன்னதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று நுழைந்த போது அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களிடமிருந்த பணத்தை அலுவலகத்தில் இருந்த கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைத்தனர். சில ஊழியர்கள் லஞ்சப் பணத்தை கழிவறையில் வீசினார்கள். சிலர் பணத்தை ஆங்காங்கே வீசினார்கள். இதை அறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவற்றை கைப்பற்றினார்கள்.
கழிவறையில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் நனைந்து இருந்தன. அவற்றை உலர வைத்து போலீசார் கைப்பற்றினார்கள். இது போல் கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட பணம், அலுவலகத் தில் ஆங்காங்கே வீசப்பட்ட பணம் ஆகியவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினார்கள். கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 718 கைப்பற்றப்பட்டது. அதில் ரூ.71 ஆயிரம் கோப்புகளுக்கு அடியிலும், கழிவறையிலும், அலுவலகத்தின் இதர பகுதிகளிலும் கேட்பாரற்ற வகையில் வீசப்பட்டவை. மீதி ரூ.33 ஆயிரத்து 718 ஊழியர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.
இது குறித்த திடுக்கிடும் தகவல்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியதாவது:-
கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் பணியில் இருந்தவர்கள் யார்-யார்?. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொருவரும் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அதற்கான ஆதாரங்களை காட்டி அந்த பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு ஜவுளி எடுக்க வீட்டில் இருந்து பணம் கொண்டு வந்திருந்தால் அந்த பணம் ஏ.டி.எம். மில் இருந்து எடுத்திருந்தால் அதற்கான ரசீதுகளை காண்பித்தால் பணம் திருப்பி கொடுக்கப்படும்.
இல்லை என்றால் கணக்கில் வராத பணம் என்று பதிவு செய்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை அல்லது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை அல்லது தீர்ப்பாயத்தின் மூலம் நடவடிக்கை என இந்த மூன்றில் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்படும். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனையின்போது கேட்பாரற்று அலுவலக வராண்டாவில் வீசப்பட்ட பணத்துக்கும், கோப்புகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்துக்கும் அந்தந்த பிரிவின் தலைவர் தான் பொறுப்பாவார். ஆனால் கழிவறையில் வீசப்பட்ட பணத்துக்கு யார் பொறுப்பு என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story