திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8–ந்தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8–ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8–ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
கந்தசஷ்டி திருவிழா
அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வருகிற 8–ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.
1–ம் திருநாள் முதல் 5–ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். பின்னர் யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும், சண்முகவிலாச மண்டபத்தை சேர்கிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.
மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரிப்பிரகாரம் வழியாக வீதி உலா சென்று கோவிலை சேர்கிறார்.
13–ந்தேதி, சூரசம்ஹாரம்
6–ம் திருநாளான வருகிற 13–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடனும், மேள வாத்தியங்களுடனும், சண்முகவிலாச மண்டபம் சேர்கிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது.
மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
14–ந்தேதி, திருக்கல்யாணம்
7–ம் திருநாளான 14–ந்தேதி (புதன்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. 8–ம் திருநாளான 15–ந்தேதி (வியாழக்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டின பிரவேசம் நடைபெறும்.
9–ம் திருநாளான 16–ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 11–ம் திருநாளான 18–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 12–ம் திருநாளான 19–ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் சுவாமி–அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.
ஏற்பாடுகள்
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் இருக்கும் வகையில், 9 இடங்களில் இரும்பு தகடாலான தற்காலிக கூடாரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கூடாரங்களிலும் 500 பக்தர்கள் தங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில் கிரிப்பிரகாரத்தைச் சுற்றிலும் இரும்பு தகடாலான தற்காலிக மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story