தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் தரமான எண்ணெய் பயன்படுத்த வேண்டும்
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் தரமான எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பலகாரம் தயாரிப்பவர்கள் தரமான எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
பதிவுச்சான்று
தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரிக்கும் அனைத்து நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் தீபாவளி சீட்டு நடத்துபவர்கள் ஆகியோர் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்ற பின்னரே உணவு பொருட்களை தயாரித்து விற்க வேண்டும். எனவே தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006–ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்றுகொள்ள வேண்டும்.
தரமான எண்ணெய்..
உணவு தயாரிப்பில் கலப்பட பொருட்களையோ, தரம் குறைந்த மூலப்பொருட்களையோ பயன்படுத்தக்கூடாது. தரமான எண்ணெய் பயன்படுத்த வேண்டும். பலகாரங்களில் கூடுதல் வண்ணம் சேர்ப்பதற்காக செயற்கை வண்ணங்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தீபாவளி பண்டிகைக்கால சமயங்களில் தற்காலிகமாக திருமண மண்டபம் மற்றும் வீடுகளில் ஸ்வீட், காரம் தயாரித்து விற்பவர்கள் உணவு பாதுகாப்புத்துறையின் தற்காலிக உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் ஸ்வீட் மற்றும் காரம் தயாரிப்பவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
புகார்கள்
பொதுமக்கள், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விவரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்கவேண்டும்.
உணவு பொருட்களின் தரம் தொடர்பான குறைகள் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ்அப் புகார் எண் 94440– 42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.