முகவரி மாறாவிட்டாலும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க அலைக்கழிப்பு ஆட்சேபனையில்லா சான்றிதழ் கேட்டு நெருக்கடி


முகவரி மாறாவிட்டாலும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க அலைக்கழிப்பு ஆட்சேபனையில்லா சான்றிதழ் கேட்டு நெருக்கடி
x
தினத்தந்தி 4 Nov 2018 4:30 AM IST (Updated: 3 Nov 2018 11:34 PM IST)
t-max-icont-min-icon

முகவரி மாறாவிட்டாலும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க ஆட்சேபனையில்லா சான்றிதழ் கேட்டு அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை,
கோவை பாலசுந்தரம் சாலையில் கோவை வடக்கு, கோவை தெற்கு ஆகிய 2 வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் செயல்பட்டன. பின்னர் கோவை வடக்கு, கோவை தெற்கு அலுவல கங்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. இதுதவிர கோவை மத்திய வட்டார போக்குவரத்துக்கு என்று ஒரு அலுவலகம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முன்பிருந்த கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு வட்டார போக்குவரத்து அலு வலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் புதுப்பிக்க செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் போது உங்கள் ஓட்டுனர் உரிமத்தின் ஆவணங்கள் கோவை வடக்கு அல்லது கோவை தெற்கு அல்லது கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு மாற்றப்பட்டு விட்டன. எனவே நீங்கள் அங்கு சென்று ஆட்சேபனையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) பெற்று வாருங்கள் என்று கூறி நெருக்கடி கொடுக்கிறார்கள். இதனால் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வருபவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க வருபவர்கள் மாற்றப்பட்ட புதிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு சென்று ஆட்சேபனையில்லா சான்றிதழ் வாங்கி வருகிறார்கள். இதற்கு அவர்களுக்கு ஒரு நாள் வீணாகிறது. பின்னர் அந்த சான்றிதழை கொண்டு புதிய வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கிறார்கள். இது பொதுமக்களை அலைக்கழிக்கும் செயல் என்றும் இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன், தமிழக போக்குவரத்து ஆணையாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஓட்டுனர் உரிமம் எடுத்தவர்கள் முகவரி மாறாத போது அவர்கள் ஓட்டுனர் உரிமம் எடுத்த அலுவலகம் மாறி விட்டது என ஆட்சேபனையில்லா சான்றிதழ் கேட்டு திருப்பி அனுப்புவது ஏற்றுக்கொள்ள முடியாது. ஓட்டுனர் உரிமம் எடுத்தவர்கள் முகவரி மாறியிருந்தால் அவர்களை சான்றிதழ் பெற்று வாருங்கள் என்று கூறுவதில் அர்த்தம் உள்ளது.

ஆனால் போக்குவரத்து நிர்வாகம் தங்கள் நிர்வாக வசதிக்காக அலுவலகங்களை பிரித்து விட்டு அதை காரணம் காட்டி ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க செல்லும்போது ஆட்சேபனையில்லா சான்றிதழ் வாங்கி வருமாறு கூறுவதும், அதற்கு ரூ.100 கட்டணம் வசூலிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செய்யும் செயலுக்காக பொதுமக்களை அலைக்கழிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

எனவே இந்த நடைமுறையை கைவிட்டு வட்டார போக்குவரத்து அலுவலக நிர்வாகமே அதற்கான ஆட்சேபனையில்லா சான்றிதழை இ-மெயில் மூலம் பெற்று ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்து தருவது தான் பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் நுகர்வோர் கோர்ட்டை அணுகி நிவாரணம் பெறும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த நடைமுறையை உடடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story