ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்
ரூ.3 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.
விருதுநகர்,
சாத்தூர் பால்நாடார் திருமண மண்டபத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் 265 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கி பேசினார். விழாவில் அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 112 உழைக்கும் மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்திற்கு என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை முழுமையாக பூர்த்தி செய்து தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டமாக திகழ்கிறது. மேலும், 2018-19-ம் ஆண்டிற்கு உழைக்கும் மகளிர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க சம்பந்தப்பட்ட துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கால்நடை வளர்ப்பு, பால்பண்ணை, சிற்றுண்டிச்சாலை, பெட்டிக்கடை, கால்நடை தீவனக்கடை, தையல்கடை, பழக்கடை, காய்கறிக்கடை, ஜெராக்ஸ் கடை போன்ற வருமானம் தரக்கூடிய பல்வேறு தொழில்கள் செய்ய மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பல்வேறு தொழில்கள் புரிந்து அவர்களுடைய குடும்ப பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடனாக இதுவரை சுமார் 750 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில், நடப்பாண்டில் ரூ.15 ஆயிரம் கோடி வங்கிக்கடனாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், விருதுநகர் மாவட்டத்திற்கு ரூ.375 கோடி வங்கிகடனாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.171 கோடி வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்வதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சாத்தூர் தொகுதிக்கு பல்வேறு திட்டப்பணிகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சாத்தூர் தொகுதிக்கு இன்னும் என்னென்ன திட்டங்களை எல்லாம் கொண்டு வரலாம் என்று தினமும் சிந்தித்து செயலாற்றி வருகிறோம். அதுமட்டுமல்லாமல், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளிலும் ரூ.450 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த அதற்கான ஆய்வுப்பணிகள் நிறைவடைந்து, பணிகள் தொடங்குவது தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை மற்றும் விருதுநகர் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 755 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.234 கோடி மதிப்பீட்டில் இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவு அடையும்.
மேலும், சாத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இருக்கன்குடியில் இருந்து ரூ.3 கோடி செலவில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த தண்ணீர் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அது வந்தவுடனே முதல்-அமைச்சர் அனுமதி பெற்று தொடங்கி வைப்போம். இதன் மூலமாக சாத்தூர் பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story