சிவகாசி பகுதியில் தொடர் மழையால் பட்டாசு விற்பனை பாதிப்பு


சிவகாசி பகுதியில் தொடர் மழையால் பட்டாசு விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 4 Nov 2018 4:00 AM IST (Updated: 4 Nov 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி, 
நாளை மறுதினம்(செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த வருட தீபாவளிக்காக சிவகாசியில் உள்ள 850-க்கும் அதிகமான பட்டாசு ஆலையில் இருந்து பல கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள சில மாவட்டங்களில் பட்டாசு விற்பனைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்து இருந்த நிலையில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கேட்டு சிலர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த வழக்கில் எப்படி தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பில் சிவகாசியில் உள்ள பல பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை குறைத்துக் கொண்டன. இந்த நிலையில் கடந்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகளை விதித்து, பட்டாசு வெடிக்க எந்த தடையும் இல்லை என தீர்ப்பு கூறியது.

பட்டாசு வெடிக்க எந்த தடையும் இல்லாததால் வெளி மாநில வியாபாரிகள் சிவகாசியில் குவிய தொடங்கினர். ஆனால் அவர்களுக்கு தேவையான பட்டாசுகள் இங்கு இருப்பு இல்லாமல் போனது. இதைதொடர்ந்து மீதம் உள்ள காலங்களில் தயாரித்து அனுப்புவதாக இங்குள்ள ஆலை அதிபர்கள் உறுதி கூறினர். ஆனால் அவர்கள் கூறியது போல் பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியாமல் போனது. இதற்கு சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்த தொடர் மழை தான் முக்கிய காரணம்.

இதனால் பட்டாசு தேவையில் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆரம்ப கட்டத்தில் சிவகாசிக்கு வந்து பட்டாசுகளை வாங்கி சென்றவர்களுக்கு விலை குறைவாக பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் விலையில் ஏற்றம் உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர் மழையால் பல பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை கடந்த வாரமே முடித்துக்கொண்டன. இதனால் சில குறிப்பிட்ட பேன்சிரக பட்டாசுகளை தயாரிக்க முடியாமல் போனது.

சிவகாசியில் உள்ள மொத்த விற்பனை கடைகளுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து பட்டாசுகளை வாங்கி செல்வார்கள். அவ்வாறு வருபவர்கள் கடந்த காலங்களில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே வந்து வாங்கி செல்வது உண்டு.

ஆனால் இந்த வருடம் அதுபோல விற்பனை நடைபெற வில்லை. மேலும் சிவகாசியில் கடந்த 3 நாட்களாக மழை விட்டு,விட்டு பெய்து வருவதால் பட்டாசு விற்பனை வெகுவாக பாதித்துள்ளது.

Next Story