விழுப்புரம் ஆதிதிராவிடர் நல தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை கணக்கில் வராத ரூ.56 ஆயிரம் சிக்கியது
விழுப்புரம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.56 ஆயிரம் சிக்கியது.
விழுப்புரம்,
விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் தாலுகா போலீஸ் நிலையத்தின் அருகில் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், விடுதி காப்பாளர்களிடம் இருந்து பணம், பரிசு பொருட்களை வாங்குவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையில் ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு அந்த அலுவலகத்திற்கு சென்றனர்.
அப்போது அலுவலகத்தில் தனி தாசில்தார் அலெக்சாண்டர் மற்றும் அலுவலக ஊழியர்கள், விடுதி காப்பாளர்கள் என 9 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரையும் அலுவலகத்திற்குள்ளேயே வைத்து கதவுகளை பூட்டி அதிரடி சோதனையை தொடங்கினர். அலுவலகத்தில் இருந்த மேஜை அறைகள், பீரோ உள்ளிட்டவற்றை போலீசார் திறந்து அங்குலம், அங்குலமாக தீவிர சோதனை செய்தனர்.
இந்த சோதனையின்போது தாசில்தார் மற்றும் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி அலுவலக நுழைவுவாயில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊழியர்களின் இருசக்கர வாகனங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் தீவிர சோதனை செய்தனர்.
3 மணி நேரமாக நடந்த இந்த சோதனை இரவு 9 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்த ரூ.56 ஆயிரத்து 50 சிக்கியது. இந்த பணத்திற்கு தாசில்தார் மற்றும் அலுவலக ஊழியர்கள் உரிய கணக்கு காட்டாததால் அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர். அதோடு சில முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு போலீசார் எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தற்போது கைப்பற்றப்பட்ட பணம் எங்கிருந்து வந்தது, யார் கொடுத்தனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முழுவதுமாக முடிந்ததும் சம்பந்தப்பட்ட அரசுத்துறை உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று வழக்குப்பதிவு செய்யப்படும் என்றனர்.
Related Tags :
Next Story