டெங்கு கொசு உற்பத்தி: திரையரங்கு உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை


டெங்கு கொசு உற்பத்தி: திரையரங்கு உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Nov 2018 4:00 AM IST (Updated: 4 Nov 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த திரையரங்கு உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

திருவாரூர்,

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகி உள்ளதா? என்பது பற்றி மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது திரையரங்கு ஒன்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை அசுத்தமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து திரையரங்கின் உரிமையாளருக்கு, கலெக்டர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

அதேபோல டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த பழைய இரும்பு கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரமும், குடியிருப்பு உரிமையாளர்கள் 2 பேருக்கு மொத்தம் ரூ.1,500-ம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

தேவையற்ற டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகளை வீடுகளில் தேங்க விடக்கூடாது. குடிநீர் தொட்டிகளை கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை குடிநீர் தொட்டிகளை பிளச்சிங் பவுடர் மூலம் தேய்த்து கழுவ வேண்டும்.

இவற்றை பின்பற்றினால் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த முடியும். திருவாரூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறத்தை வைத்திருந்த 1,603 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 450 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது மாவட்ட மலேரிய தடுப்பு அலுவலர் பழனிசாமி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story