தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது தீபா வெங்கட் பேட்டி


தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது தீபா வெங்கட் பேட்டி
x
தினத்தந்தி 3 Nov 2018 11:00 PM GMT (Updated: 3 Nov 2018 7:14 PM GMT)

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு மகள் தீபா வெங்கட் கூறினார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை அருகே உள்ள நவக்கிரக தலமான சூரியனார் கோவிலுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மனைவி உஷா, மகள் தீபா, பேரன் விஷ்ணு, பேத்தி சுஷ்மா மற்றும் அவர்களது உறவினர்கள் 6 பேர் நேற்று வருகை தந்தனர்.

கோவிலில் வழிபாடு செய்த பின்னர் வெங்கையா நாயுடு மகள் தீபா வெங்கட் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் வழிபாடு நடத்தும்போது மன அமைதி ஏற்படுகிறது. நமது புராதன சின்னங்களாக உள்ள கோவில்கள், கலாசாரத்தின் அடிப்படை. இத்தகைய கோவில்களை நாம் புனிதமாக போற்றி பாதுகாக்க வேண்டும் என்று எனது தந்தை கூறுவார்.

பொதுமக்களும் கோவில் நிர்வாகத்தினரும் அத்தகைய உணர்வோடு கோவில்களை போற்றி பாதுகாக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு மக்களும் தினமும் இறை வழிபாட்டில் ஈடுபட வேண்டியது அவசியம். அதற்கு இத்தகைய பழமையான கோவில்கள் நமக்கு உறுதுணையாக அமைந்துள்ளது.

தீபாவளி பண்டிகை அன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை உடுத்தி பெரியோரிடம் ஆசி பெற்று குடும்பத்தாருடன் பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் மகிழும் உன்னதமான நாள் ஆகும். இந்த நாள் ஆண்டிற்கு ஒருமுறை தான் வருகிறது. இந்த ஒரு நாளில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்று சொல்வதை ஏற்க இயலாது. இப்படி ஒவ்வொன்றுக்கும் கருத்து சொன்னால் வரும் காலத்தில் ஒவ்வொருவரும் எப்போது தூங்க வேண்டும். எப்போது விழிக்க வேண்டும். எப்போது சிரிக்க வேண்டும். எப்போது அழுக வேண்டும் என அனைத்திற்கும் சட்டம் வந்து விடும் நிலை உள்ளது. எனவே நமது பண்பாடு, கலாச்சார பெருமைகளில் தேவையற்ற மாற்றங்களை செய்து மக்களை தேவையில்லாமல் குழப்புவதை தவிர்க்க வேண்டும். நாட்டின் உயரிய மதிப்பு மிக்க உச்சநீதிமன்றம், இதனை முறையாக வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கஞ்சனூரில் உள்ள சுக்கிரன் ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு ஸ்தலமான நாகநாத சுவாமி கோவிலில் வழிபாடு நடத்தினர்.

Next Story