மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது: கடைமடை பகுதியில் குளங்களுக்கு வந்து சேராத தண்ணீர்


மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே குறைந்தது: கடைமடை பகுதியில் குளங்களுக்கு வந்து சேராத தண்ணீர்
x
தினத்தந்தி 3 Nov 2018 10:30 PM GMT (Updated: 3 Nov 2018 7:36 PM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் பல நாட்களுக்கு பிறகு தற்போது 100 அடிக்கு கீழ் குறைந்து உள்ளது. இருப்பினும் தஞ்சை மாவட்ட கடைமடை பகுதி குளங்கள் நிரம்பவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் அங்குள்ள கபிணி, கிருஷ்ணராஜசாகர் உள்பட அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நீர் மேட்டூர் அணையை அடைந்து மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு இந்த ஆண்டு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு அணை நீர் மட்டம் குறைந்தாலும் தொடர்ந்து கர்நாடகாவில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் இந்த ஆண்டு மேட்டூர் அணை 4 முறை நிரம்பி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறைந்தது.

மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டாலும் தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள பல குளங்களுக்கு சிறிதளவு கூட தண்ணீர் வந்து சேரவில்லை.

குறிப்பாக சுமார் 1,000 முதல் 1500 ஏக்கர் வரை பாசன வசதி அளிக்கும் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஊமத்தநாடு பெரியஏரி, விளங்குளம் பெரியஏரி, பெருமகளூர் ஏரி, சோலைக்காடு ஏரி, கொரட்டூர் ஏரி ஆகிய ஏரிகளை தண்ணீர் சிறதளவு கூட எட்டிப்பார்க்கவில்லை.

இதனால் இந்த பகுதிகளில் சம்பா சாகுபடி கைவிட்டு போய் உள்ளது. தற்போது பருவமழை தொடங்கி உள்ள நிலையில் மழை நீரை மட்டும் நம்பி சாகுபடி செய்வது இயலாத காரியம். பருவமழை அதிக அளவு பெய்து ஏரிகள் நிரம்பினால் மட்டுமே சாகுபடி நடைபெறும்.

கல்லணையில் இருந்து கடைமடை பகுதிக்கு முறைவைக்காமல் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தால் கடை மடை பகுதியில் ஏரி, குளங்கள் நிரம்பி இருக்கும். முறைவைத்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வீரியக்கோட்டை ஏரி, கைகனவயல் ஏரி, ஆண்டிக்காடு ஏரி, பள்ளத்தூர் ஏரி உள்பட 200-க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகளும் நிரம்பவில்லை.

இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே தஞ்சை மாவட்ட கடைமடை பகுதியில் சாகுபடி பாதிக்கப்பட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு போதிய அளவு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story