திருச்சி அருகே பாய்லர்ஆலை பூங்காவில் 30 மான்கள் மர்மசாவு காரணம் என்ன? வனத்துறையினர் விசாரணை


திருச்சி அருகே பாய்லர்ஆலை பூங்காவில் 30 மான்கள் மர்மசாவு காரணம் என்ன? வனத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 3 Nov 2018 11:15 PM GMT (Updated: 3 Nov 2018 7:42 PM GMT)

திருச்சி திருவெறும்பூர் அருகே பாய்லர்ஆலை பூங்காவில் 30 மான்கள் மர்மமாக இறந்தன. இதற்கான காரணம் என்ன? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவெறும்பூர்,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே பாய்லர்ஆலை குடியிருப்பில் மான் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் 210 மான்கள், முயல் உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பூங்கா திறந்து இருக்கும். சிறியவர்களுக்கு ரூ.3-ம், பெரியவர்களுக்கு ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில் இங்கு பார்வையாளர் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

பூங்காவை பாய்லர் ஆலையின் ஓய்வுபெற்ற ஊழியர்கள் பராமரித்து வருகிறார்கள். இந்தநிலையில் இங்கிருந்த மான்கள் திடீர், திடீரென இறந்து வருகின்றன. கடந்த 1-ந் தேதி 17 மான்கள் இறந்தன. ஒரேநாளில் 17 மான்கள் இறந்ததால் பூங்கா நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 9 மான்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்தநிலையில் நேற்றும் 4 மான்கள் இறந்தன. கடந்த 3 நாட்களில் மட்டும் 30 மான்கள் மர்மமாக இறந்துவிட்டன. மான்கள் இறந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.

திருச்சி மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் முருகேசன், திருவெறும்பூர் கால்நடை மருத்துவர் சந்துரு தலைமையிலான குழுவினர் பூங்காவிற்கு சென்று இறந்த மான்களின் உடல்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதுபற்றி இணை இயக்குனர் முருகேசன் கூறியதாவது:-

கடந்த 1-ந் தேதி காலை 8 மான்களும், மாலை 9 மான்களும் அடுத்தடுத்து இறந்தன. இதுபற்றி அறிந்ததும் விரைந்து சென்று, இறந்த மான்களின் ரத்த மாதிரியை சேகரித்து திருச்சி கால்நடை மருத்துவமனை மற்றும் சென்னையில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம். மறுநாளும் 9 மான்கள் இறந்தன. எனவே மான்கள் அடுத்தடுத்து இறப்பது குறித்து ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம்.

அவர்கள் இறந்த ஆண் மற்றும் பெண் மான்களின் சடலத்தை அனுப்பி வைக்குமாறு கூறினார்கள். அதன்படி 2 மான்களின் சடலங்களை ஒரத்தநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளோம். வாசனை வராத இலை, தழைகளை தான் மான்கள் உண்ணும். இங்குள்ள மான்களுக்கு வழக்கமாக வேப்பிலையை தான் உணவாக கொடுத்து வந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக ஒரு வகையான புற்கள் தீவனமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை அளவுக்கு அதிகமாக கொடுத்ததால் மான்கள் இறந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தபிறகு தான் மான்கள் இறப்புக்கான காரணம் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

திருவெறும்பூர் கால்நடை மருத்துவர் சந்துரு கூறுகையில், “மான்களுக்கு நோய் தடுப்பு ஊசி செலுத்த முயன்றபோது, அவை ஓடிவிடுகின்றன. அவற்றை விரட்டிச்சென்று பிடித்து ஊசி செலுத்துவது இயலாத காரியமாக உள்ளது. நோய்வாய்ப்பட்ட மான்களுக்கு ஊசி செலுத்தியும் பயன் ஏற்படவில்லை“ என்றார்.

மான்கள் இறந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கூறுகையில், “வழக்கமாக அங்கு மான்களுக்கு வேப்பிலைகளையும், கேண்டீனில் உள்ள காய்கறி கழிவுகளையும் தான் உணவாக வழங்கி வந்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக அங்கு கிடைக்கக்கூடிய ஒருவகை புற்களை உணவாக கொடுத்துள்ளனர். அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் தொண்டையில் புற்கள் சிக்கி மான்கள் இறந்திருக்கக்கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இறந்த மான்களின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அதுகுறித்த அறிக்கை கிடைத்தால் தான் மான்கள் இறப்பு குறித்த உண்மையான காரணம் தெரியவரும். அறிக்கை கிடைத்ததும் மான்களுக்கு தீவனம் வைத்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

Next Story