குமரி மாவட்டத்தில் விடிய- விடிய மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


குமரி மாவட்டத்தில் விடிய- விடிய மழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 4 Nov 2018 4:30 AM IST (Updated: 4 Nov 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் விடிய- விடிய மழை பெய்தது. இதனால் குளச்சல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது.

நாகர்கோவில்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று விடிய- விடிய பெய்தது.

மேற்கு மாவட்ட பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் சென்றது.

நாகர்கோவிலை பொறுத்தவரையில் இரவு 10 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் தூறிக்கொண்டே இருந்தது. நள்ளிரவு 12.30 மணி அளவில் கனமழையாக பெய்தது. இந்த மழை தொடர்ந்து விடிய விடிய பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக செம்மாங்குடி ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, அவ்வை சண்முகம் சாலைகளில் அதிகளவில் தண்ணீர் சென்றது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்றால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலையும், கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி செல்லும் சாலையும் மிகவும் மோசமாக காணப்பட்டது. அதாவது இந்த 2 சாலைகளிலும் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்களை ஊர்ந்தபடியே சென்றன.

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தடுப்பணை தண்ணீரில் மூழ்கியது. தடுப்பணை வழியாக மக்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் சுற்றிச் சென்றனர். திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் நேற்று காலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பு பேனர் அந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

மழை பெய்து கொண்டு இருந்ததால் குளச்சலில் பெரும்பாலான கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடலுக்கு சென்ற ஒருசில மீனவர்களுக்கும் விரைந்து கரை திரும்பினர். பின்னர் மீனவர்கள் தங்களது படகுகளை மேடான பகுதிக்கு கொண்டுபோய் பாதுகாப்பாக நிறுத்தினர்.

மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 70 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதேபோன்று குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்- 28, தக்கலை- 51, குழித்துறை- 36.4, பூதப்பாண்டி- 21.2, சுருளோடு- 51.2, கன்னிமார்- 61.4, களியக்காவிளை- 12.4, ஆரல்வாய்மொழி- 20.4, பாலமோர்- 55.2, மயிலாடி- 23, கொட்டாரம்- 32, நிலப்பாறை- 15.2, இரணியல்- 44, ஆனைகிடங்கு- 36, குளச்சல்- 48.6, குருந்தன்கோடு- 47.6, அடையாமடை- 36, முள்ளங்கினாவிளை- 68, புத்தன்அணை- 46.2, திற்பரப்பு- 32 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

அணைப்பகுதிகளில் பேச்சிப்பாறை- 31, பெருஞ்சாணி- 45, சிற்றார் 1- 29.4, சிற்றார் 2- 30, மாம்பழத்துறையாறு- 32 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதாவது மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 442 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து அதிகரித்து 700 கனஅடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதுபோன்று 26 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 431 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. மேலும் சிற்றார் 1 அணைக்கு 248 கனஅடி வீதமும், சிற்றார் 2 அணைக்கு 75 கனஅடி வீதமும், பொய்கை அணைக்கு 5 கனஅடி வீதமும் தண்ணீர் வருகிறது. அதேநேரத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து 604 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 245 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணையில் இருந்து 200 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருக்கிறது. மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் 52 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

Next Story