தீபாவளியையொட்டி கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம்: 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் - நெரிசல், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை


தீபாவளியையொட்டி கடைவீதிகளில் அலைமோதும் கூட்டம்: 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் - நெரிசல், குற்றச்செயல்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Nov 2018 4:30 AM IST (Updated: 4 Nov 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர்,

தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடிப்பது தான் குதூகலம். இதனால் ஜவுளிக்கடைகளில் கடந்த சில தினங்களாக கூட்டம் அலைமோதி வருகிறது. புதிய புதிய ரகங்கள் ஜவுளிக்கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளன.

இதனால் வேலூரில் ஜவுளிக்கடைகள் அதிகம் உள்ள ஆற்காடு ரோடு, பேரிப்பேட்டை சுப்பிரமணியசாமி கோவில் தெரு, கிருபானந்தவாரியார் வீதி, பில்டர்பெட் ரோடு, அண்ணாசாலை உள்பட பல்வேறு வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும், திருட்டு உள்ளிட்டவற்றை தவிர்க்கவும் கிருபானந்தவாரியார் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம், பழைய மீன்மார்க்கெட் பகுதி என 2 இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கோபுரத்தில் போலீசார் அமர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் ஒலிபெருக்கி மூலமாக அவ்வப்போது பொதுமக்களிடம் “திருடர்களிடம் இருந்து உடமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி வருகின்றனர். ஏதாவது ஒரு பகுதியில் நெரிசல் ஏற்பட்டால் உடனடியாக வயர்லஸ் மூலம் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அங்கு நெரிசலை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தீபாவளி நாளில் பட்டாசுகள் வெடிக்கும்போது தீ விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டாசு வியாபாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறி உள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மார்க்கெட், பஜார், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விபத்தில்லாத தீபாவளி எவ்வாறு கொண்டாட வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்து வருகின்றனர்.


Next Story