நகராட்சிகளின் மண்டல இயக்குனர் உத்தரவு எதிரொலி: கடலூரில், 300 தொழிலாளர்கள் துப்புரவு பணி
நகராட்சிகளின் மண்டல இயக்குனர் உத்தரவிட்டதின் எதிரொலியால் கடலூர் நகரில் நேற்று 300 தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் நகரம் குப்பை நகரமாக காட்சி அளிக்கிறது. நகரில் சாலையோரங்களிலும், தெருக்களிலும் பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசியெறியப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர் கேடு காணப்படுகிறது. இதனால் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகின்றன.
இதனை கட்டுப்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்குடன் இருப்பதாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நகரின் சுகாதார நிலைமையை ஆய்வு செய்வதற்காக நகராட்சிகளின் மண்டல இயக்குனர் டாக்டர் இளங்கோவன் நேற்று முன்தினம் கடலூருக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது பல தெருக்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்திருந்ததை பார்த்த அவர், சம்பந்தப்பட்ட வார்டுகளின் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
துப்புரவு பணியாளர்களை கண்காணித்து வேலை வாங்க தவறிய 3 சுகாதார ஆய்வாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டார். மேலும், குப்பைகள் அனைத்தையும் 10 நாட்களுக்குள் அகற்றி விட வேண்டும் என்று ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி நகராட்சி ஆணையர்(பொறுப்பு) பாலு மேற்பார்வையில் பொறியாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் முன்னிலையில் திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர் ஆகிய 2 இடங்களில் நேற்று துப்புரவு பணி நடந்தது.
இதில் குப்பைகள் அதிகமாக இருந்த திருப்பாதிரிப்புலியூரில் 200 துப்புரவு தொழிலாளர்களும், முதுநகரில் 100 துப்புரவு தொழிலாளர்களும் துப்புரவு பணியில் ஈடுபடுத்தபட்டனர்.
கடலூர் நகரை பொறுத்தவரையில் பல இடங்களில் குப்பைத்தொட்டிகளே இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரமற்ற குப்பைத்தொட்டிகளை வாங்கி வைத்தனர், ஆனால் அந்த குப்பை தொட்டிகள் எங்கே இருக்கின்றன என்பதே தெரியவில்லை.
பல தெருக்களில் குப்பைத்தொட்டிகள் இல்லாததால் பொது மக்கள், தெருவோரங்களில் குப்பைகளை வீசியெறிகிறார்கள். எனவே குப்பை தொட்டிகள் இல்லாத இடங்களில் துருப்பிடிக்காத இரும்பினால் ஆன குப்பைத்தொட்டிகளை வாங்கி வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story