இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைது


இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2018 4:45 AM IST (Updated: 4 Nov 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த ஆட்டோ டிரைவரை 7 மாதத்துக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவிமும்பையை சேர்ந்தவர் சத்யஜித் தில்பக் (வயது38). கடந்த 7 மாதத்திற்கு முன் இவரது ஆட்டோவில் 16 வயது இளம்பெண் மகாபேயில் இருந்து ஏறினார். சத்யஜித் தில்பக் அந்த இளம்பெண்ணை அவர் இறங்க வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லாமல் மகாபே - ஷில்பாட்டா சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்குள் கடத்தி சென்றார். பின்னர் அங்கு வைத்து அவர் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்தார்.

இதையடுத்து அவர் இளம்பெண்ணை ஆட்டோவில் ஏற்றி கொண்டு தானே - பேலாப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மீண்டும் தன்னை கற்பழிப்பதற்காக தான் கடத்தி செல்வதாக கருதிய இளம்பெண் ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பினார். இதில் அவர் காயம் அடைந்தார்.

பின்னர் சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதை தெரிந்து கொண்ட ஆட்டோ டிரைவர் சத்யஜித் தில்பக், தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், அவர் தனது மனைவியை பிரசவத்துக்காக புனேயில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்க வைத்துள்ளார். அங்கு அவரது மனைவிக்கு குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது குழந்தையையும், மனைவியையும் பார்க்க புனேக்கு சத்யஜித் தில்பக் வருவதாக நவிமும்பை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதுபற்றி அவர்கள் புனே போலீசாருக்கு தகவல் கொடுத்து அவர்களது உதவியை நாடினர். அதன்பேரில் புனே போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது, அங்கு வந்த சத்யஜித் தில்பக்கை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Next Story