மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் உடைத்து அகற்றம் - நவீன கருவி மூலம் நடவடிக்கை


மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகள் உடைத்து அகற்றம் - நவீன கருவி மூலம் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Nov 2018 4:15 AM IST (Updated: 4 Nov 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் காகிதப்பட்டறை மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகளை நவீன கருவி மூலம் உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

வேலூர்,

வேலூர் நகரில் உள்ள சைதாப்பேட்டை, காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி போன்ற பகுதிகளில் மலைகள் தொடர்ச்சியாக உள்ளன. இந்த மலையின் அடிவாரத்தில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன.

நேற்று முன்தினம் மாலையில் வேலூரில் மழை பெய்தது. இரவு 7.30 மணி அளவில் காகிதப்பட்டறை மலையடிவாரம் நைனியப்பன் தெருவில் உள்ள மலையின் மேல் இருந்த ஒரு பெரிய பாறை பயங்கர சத்தத்துடன் கீழே உள்ள குடியிருப்புகள் நோக்கி வேகமாக உருண்டு வந்தது. அந்த பாறை உருண்டோடி வரும் சத்தம்கேட்டு பீதி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

பாறை உருண்டு வந்தபோது பயங்கர சத்தத்துடன் 3 துண்டுகளாக உடைந்து கீழிறங்கின. அவை மலையின் மீது உள்ள மரங்கள், பெரிய பாறைகளில் மோதி நின்றன. மரங்கள் கேடயமாக நின்று பாறைகள் குடியிருப்புகள் மீது விழாமல் தடுத்தன.

ஒரு துண்டு பாறை வீட்டின் மீது விழுவது போன்று வந்து நின்றது. இரவிலும் ஏதாவது இதுபோன்று நடந்து விடுமோ என்ற பீதியில் அந்த பகுதி பொதுமக்கள் விடிய விடிய தூங்காமல் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து உடைந்த பாறைகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். இரவு நேரம் என்பதால் மலைப்பகுதிக்கு அவர்களால் செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை வேலூர் தாசில்தார் ரமேஷ், மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் கண்ணன் உள்பட அதிகாரிகள் பாறை உருண்டு விழுந்த இடத்திற்கு சென்று 3 துண்டுகளாக கிடந்த பாறைகளை பார்வையிட்டனர். அப்போது பொதுமக்கள் அந்த பாறைகள் அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மலையின் மேல் உள்ள அதிக எடைகொண்ட பாறைகளை அகற்றுவது கடினமான செயல் என்பதால் அந்த பாறைகளை உடைத்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து பாறை உடைக்கும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பாறை உடைக்கும் நவீன கருவியை கொண்டு வந்து பாறையை சிறு, சிறு துண்டுகளாக உடைக்கும் பணியை அவர்கள் தொடங்கினர். உடைக்கப்பட்ட பாறை துண்டுகளை அந்த இடத்திலிருந்து அகற்றி மலையின் மேல் பகுதியிலேயே பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாப்பாக வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “உருண்டு வந்த பாறையை மரங்கள் தடுத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனவே மலையின் மீது பொதுமக்கள் மரம் வளர்க்க வேண்டும். மரம் வளர்ப்பதால் நமக்கும், இயற்கைக்கும் பாதுகாப்பாக இருக்கும்” என்றனர்.


Next Story