தொழில் முனைவோர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் கே.சி.வீரமணி


தொழில் முனைவோர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும் - அமைச்சர் கே.சி.வீரமணி
x
தினத்தந்தி 3 Nov 2018 11:30 PM GMT (Updated: 3 Nov 2018 9:37 PM GMT)

தொழில் முனைவோர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும் என்று கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

வேலூர்,

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி புதுடெல்லியில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசியதாவது:-

தொழில் முனைவோர் தொழில் தொடங்க மாத கணக்கில் காத்திருக்கும் நிலை இருந்தது. தற்போது ஒரு மணி நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு கடன் வழங்கும் விதமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் தொடங்க சாதகமான மாவட்டமாக உள்ளது. தொழில் தொடங்குபவர்கள் முதலில் சிறிய அளவில் முதலீடு செய்ய வேண்டும். புதிய தொழில் தொடங்குபவர்களும், ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களும் தொழிலை விரிவுப்படுத்த தேவையான அனைத்து கடனுதவிகள் வழங்க வங்கிகள் தயாராக உள்ளது.

முந்தைய காலக்கட்டத்தில் தோல் தொழில் ஏற்றுமதியில் 36 சதவீதம் அன்னிய செலாவணியை பெற்றுத்தந்த மாவட்டமாக வேலூர் மாவட்டம் திகழ்ந்தது. தற்போது நலிவடைந்த நிலையில் இருக்கும் தோல் தொழில்களை மீண்டும் தொடங்கிட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக புதுடெல்லியில் நடந்த காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்குபவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்கும். தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பல்வேறு வங்கிகள் சார்பில் புதிதாக தொழில் தொடங்கும் 27 தொழில் முனைவோர்களுக்கு ரூ.7 கோடியே 37 லட்சம் மதிப்பிலான கடன் விடுவிப்பு ஆணைகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.சிங், இந்தியன் வங்கி பொது மேலாளர் நாகராஜன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் கேதார்நாத், முன்னோடி வங்கிகளின் மாவட்ட மேலாளர் முருகேசன், இந்தியன் வங்கி மண்டல பொதுமேலாளர் சுந்தர்ராஜன், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story