தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்


தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்
x
தினத்தந்தி 3 Nov 2018 9:54 PM GMT (Updated: 3 Nov 2018 9:54 PM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

வண்டலூர்,

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் பணிபுரியம், தொழிலாளர்கள், மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதே போல 1,000-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் அனைத்தும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலை சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ்நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலையம் போன்ற இடங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் நின்று செல்லும்.

பொதுமக்கள் வந்து செல்வதற்காக தமிழக அரசு சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ் நிலையத்தை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, மொபைல் கழிவறை வசதி, பயணிகள் அமருவதற்கு பந்தல் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல ஆம்னி பஸ் பயணிகளுக்கு தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் பஸ் நிலையத்தில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவசர தீ விபத்துகளை தடுப்பதற்கு தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பஸ்நிலையத்தில் பயணிகளை கண்காணிப்பதற்கு அதி நவீன கேமராக்கள் 6 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதில் பதிவாகும் காட்சிகள் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்படும்.

மேலும் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மேற்பார்வையில் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

Next Story