மாவட்ட செய்திகள்

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர் + "||" + Dream heroine

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்

கனவு நாயகி - பட்டுக்கோட்டை பிரபாகர்
அமுதாவைப் பெண் பார்க்க வருகிறவர்களிடம் ஒரு விஷயத்தை மறைப்பது குறித்து அவள் பயப்படுகிறாள். இல்லையென்றால் திரு மணம் நடக்காது என்று அவளைச் சமாதானப்படுத்துகிறான் அண்ணன் ஆனந்தன்.
முன்கதைச் சுருக்கம்:

அமுதாவைப் பெண் பார்க்க வருகிறவர்களிடம் ஒரு விஷயத்தை மறைப்பது குறித்து அவள் பயப்படுகிறாள். இல்லையென்றால் திருமணம் நடக்காது என்று அவளைச் சமாதானப்படுத்துகிறான் அண்ணன் ஆனந்தன். பிரபல நடிகை அபிநயா தங்களை அவமானப்படுத்தியதற்காக பாடம் கற்றுத்தர நடிகர்கள் இனியவனும், தீபக்கும் ஆலோசிக்கிறார்கள்.

‘‘அவ மரியாதைன்னா என்னன்னு பாடம் கத்துக்கணும். நம்மரெண்டு பேர்கிட்டயும் தனிப்பட்ட முறையிலயாச்சும் மன்னிப்புக் கேட்டே ஆகணும்’’ என்றான் இனியவன்.

‘‘எனக்கு ஒரு யோசனை தோணுது’’ என்றான் தீபக்.

‘‘என்ன?’’ என்றான் தன் மது கிளாசை மீண்டும் நிரப்பிக்கொண்டு, அதில் ஐஸ் துண்டுகளை மிதக்கவிட்டபடி இனியவன்.

‘‘அபிநயா ரகசியமா காதலிச்சிட்டிருக்கா, தெரியுமில்ல?’’

‘‘நாலு வருடம் முன்னாடி அந்த கிரிக்கெட்காரனைக் காதலிச்சி பாதிலயே புட்டுக்கிச்சே.. ‘என் வாழ்வில் இனி காதலுக்கு இடமில்லை’ அப்படின்னு பேட்டியே குடுத்தாளே..’’

‘‘அதெல்லாம் நாலு வருடம் முன்னாடி. இப்போ ஒரு புது காதல் வந்திருக்கு இனியா’’

‘‘இது எனக்கேத் தெரியாத புது செய்திடா. பார்ட்டி யாரு?’’

‘‘ரொம்ப பெரிய புள்ளி. இந்தியால பதினேழு அலுவலகம் வெச்சிருக்கற ஒரு மகா முரட்டு பில்டர்னு மட்டும் தெரியும்.’’

‘‘அது யாருன்னு தெரியாதா?’’

‘‘நம்ம ஜர்னலிஸ்ட் ராஜராஜன் சாருக்குத் தெரியும். கேட்டுப் பார்த்தேன். சொல்ல மாட்டேங்கறார்’’

‘‘அவர்கிட்ட விஷயத்தைக் கறக்கறது ரொம்ப சுலபம். ஆனா அது யாரா இருந்தா நமக்கென்ன.. அதைத் தெரிஞ்சி என்ன செய்யப் போறோம்?’’

‘‘நான் திட்டம்னு சொன்னதே அதை வெச்சிதான். அந்தக் காதலைக் கலைச்சிட்டோம்னா இரண்டாவது காதல் தோல்வியில் இவ மனசு நொந்து போயிடுவா. அத்தனைத் திமிரும் அடங்கிடும்’’

‘‘ஐடியா நல்லா இருக்கு. எப்படி காதலைக் கலைக்கறது?’’

‘‘அது அப்பறம்.. முதல்ல அபிநயாவைக் காதலிக்கிற அந்தக் கோடீஸ்வரன் யாருன்னு தெரிஞ்சிக்கணும். அந்தக் காரியத்தை நீசெய். மத்ததை அப்பறம் பேசலாம். எனக்கு டைம் ஆச்சி. காலைல கொச்சின் போறேன். அதிகாலை பிளைட்டு. வர்றேன்’’ தன் கார் சாவியை எடுத்துக்கொண்டு எழுந்தான் தீபக். அவன்போனதும் போனை எடுத்த இனியவன் பத்திரிகையாளர் ராஜ ராஜனை அழைத்தான்.

‘‘என்ன ராஜன் சார்.. நலமா இருக்கீங்களா?’’

‘‘ஆச்சரியமா இருக்கே சார். பத்து தடவை கூப்புட்டாதான் லைனுக்கு வருவீங்க.. நீங்களே கூப்புடறீங்களே.. என்ன சார்?’’

‘‘உங்க ஸ்கூட்டர் ரொம்ப பழசாப் போயிடுச்சி, மாத்தணும்னு சொல்லிட்டிருந்தீங்க இல்ல..’’

‘‘ஆமாம் சார். ரெண்டு நாளைக்கொரு தடவை ரிப்பேராயிடுது. இப்பக்கூட ஒரு மெக்கானிக் கடையிலதான் உக்காந் திருக்கேன்’’

‘‘நான் பயன்படுத்தின ஒரு பைக்கை சும்மாவேப் போட்டு வெச்சிருக்கேன். காலைல வந்து எடுத்துட்டுப் போங்க சார்’’

‘‘சார்..நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை..’’

‘‘இருக்கட்டும். நாளைக்கு பிரசாத் ஸ்டூடியோல இருப்பேன். லன்ச் கேப்ல வந்து என்னைப் பாருங்க. ஒரு விஷயமிருக்கு’’

‘‘வந்துடறேன் சார்’’ என்றார் ராஜராஜன் உற்சாகமாக.

***

ராஜலட்சுமி கோபமாக ஹாலின் நீள அகலங்களை நடந்து நடந்து அளந்துகொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த நைட்டி உடைமூடி வைத்திருக்கும் தேரை நினைவுப்படுத்தியது.

வேலைக்காரி சந்தியா மெதுவாக அங்கே வந்து தூரமாக நின்று தனக்கேக் கேட்காத குரலில் பேசினாள்.

‘‘மணி பத்தரை ஆகப் போகுதும்மா’’

‘‘எனக்கு மணி பார்க்கத் தெரியாதா?’’

‘‘அதில்லம்மா.. ஒம்போது மணிக்கே சாப்ட்ருவீங்க’’

‘‘எனக்குப் பசிக்கலை. நீ வேணும்னா சாப்ட்டுட்டு கிளம்பு!’’

‘‘நீங்களும் அக்காவும் சாப்புடாம நான் என்னிக்கு சாப்ட்டேன்? பரவால்லம்மா. நான் மெதுவா போய்க்கிறேன்’’

நகரப்போன அவளை சொடக்குப் போட்டு அழைத்த ராஜலட்சுமி தன் அருகில் வரச்சொல்லி சைகையில் அழைத்தார். வந்த சந்தியா பள்ளி மாணவி மாதிரி கைகளைக் கட்டிக்கொண்டாள்.

‘‘உன்னை இங்க வேலைக்குச் சேர்த்தது யாரு?’’

‘‘நீங்கதாம்மா’’

‘‘எத்தனை வருஷமாச்சி நீ இங்க வந்து?’’

‘‘ஏழு வருஷமாச்சிம்மா’’

‘‘எங்கிட்ட நீ உண்மையாதானே இருக்கே?’’

‘‘சாமி சத்தியமாம்மா’’

‘‘அபிநயா பத்தி ஒண்ணு கேக்கப் போறேன். உனக்கு பதில் தெரியும்னு எனக்குத் தெரிஞ்சிதான் கேக்கறேன். மறைக்காம உண்மையைச் சொல்லணும்’’

‘‘எனக்குத் தெரிஞ்சதைச் சொல்றேம்மா.’’

‘‘தினம் படப்பிடிப்புக்கு அவளோட நீதானே கூடப் போறே?’’

‘‘ஆமாம்மா’’

‘‘அபிநயா படம் எடுக்கணும்னு ஒரு யோசனை சொன்னா. எனக்கு அது பிடிக்கலை. சொந்தப் படம் எடுத்து தோத்துப் போயி ஒண்ணுமில்லாம தெருவுல நின்னவங்க கதையை எல்லாம் சொன்னேன். சரிம்மா.. நான் படம் எடுக்கலைன்னு சொன்னா.. ஆனா..புரொடக்‌ஷன் மேனேஜர் ஜோசப் நேத்து வந்துட்டுப் போயிருக்கார். நீதான் அவருக்கு கேரவன்ல சாப்பாடு பரிமாறினே. சரிதானே?அவங்க என்ன பேசினாங்க?’’

‘‘அம்மா.. நான் எப்பவும் எனக்கு காதே இல்லனு நினைச்சிக்கிட்டு எதையும் கவனிக்க மாட்டேன்ம்மா’’

‘‘செருப்பால அடிப்பேன்டி நாயே! நாடகம்லாம் வேணாம். காதை மூடிக்குவாளாம். சாம்பார் ஊத்துன்னு சொன்னா எப்படி கேக்கும்? அப்போ திடீர்னு காது திறந்துக்குமா? அவங்க என்ன பேசிக்கிட்டாங்க? இப்ப நீ சொல்லப் போறியா இல்லையா?’’

‘‘சொன்னா அக்கா திட்டுவாங்க. சொல்லனைன்னா நீங்க திட்டுவீங்க. நான் என்ன செய்றதும்மா?’’

‘‘நாளைக்கே உன்னை வேலையிலேர்ந்து தூக்கிடுவேன். சம்பளம் குடுக்கறது நான். சொல்லு. என்ன பேசிக்கிட்டாங்க?’’

‘‘படம் எடுக்கற மாதிரிதான் பேசிக்கிட்டாங்கம்மா. பத்து கோடில செய்யணும்னு அக்கா சொன்னாங்க.’’

இப்போது அபிநயாவின் கார் பங்களாவின் கேட் முன்னால் வந்துநின்று ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது.

‘‘சரி.. நீ போ.. நான் பேசிக்கிறேன்’’

‘‘அம்மா.. கெஞ்சிக் கேட்டுக்கறேன். நான் சொன்னேன்னு..’’

‘‘சொல்ல மாட்டேன்.. போ!’’

அபிநயா கூந்தலில் பொருத்தின அலங்கார கிளிப்பை நீக்கி தலையை அசைத்து கூந்தலை சிலுப்பியபடி வீட்டுக்குள் வந்தாள். ரெப்ரிஜிரேட்டருக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் குடித்தாள்.

‘‘நீ சாப்ட்டியாம்மா?’’ கேட்டபடி கதவை மூடினாள்.

‘‘அம்மான்னு ஒருத்தி இருக்கற நினைப்பு இருக்கா உனக்கு?’’ என்றாள் சோபாவில் அமர்ந்தபடி ராஜலட்சுமி.

அவளருகில் வந்து அமர்ந்து, ‘‘நானே படு டென்ஷன்ல வந்திருக்கேன்.. உனக்கு என்னாச்சி?’’ என்றாள் அபிநயா.

‘‘என்னை விடு. என்ன டென்ஷன்?’’

‘‘இசை வெளியீட்டு விழால அந்த இனியவன் என்னை மேடையில் வெச்சிக்கிட்டே என்ன பேசினான் தெரியுமா?’’

‘‘என்ன பேசினான்?’’

‘‘மூத்த நடிகைகள் எல்லாம் ஒதுங்கி இளைய நடிகைகளுக்கு வழி விடணுமாம்.. ஒரு புது படத்தோட அறிவிப்பு வந்தாலே அந்தப் படத்துல கதாநாயகியா நடிக்கிறதுக்கு சில பேரு எல்லா உள் வேலைகள்லயும் இறங்கிடறாங்களாம்..’’

‘‘அடப்பாவி! நீ எதுவும் பதில் சொல்லலையா?’’

‘‘அதெப்படி சொல்லாம இருப்பேன்? இன்னும் மூணு வருடத்துக்கு எங்கிட்ட கால்ஷீட் இல்லை. நான் வாய்ப்பு கேட்டேன்னு எந்த தயாரிப்பாளரோ இல்ல நடிகரோ சொன்னா.. நான் நடிக்கிறதையே நிறுத்திடறேன், இது சவால் அப்படின்னு பேசினேன். செமத்தியா கைத் தட்னாங்க. அவனுக்கு மூஞ்சி செத்துப்போச்சி.’’

‘‘அதெல்லாம் இருக்கட்டும்..படம் எடுக்கற யோசனையை கைவிட்டுட்டேதானே?’’

‘‘நீதான் வேணாம்னு சொன்னியே.. உன்னை மீறி ஒரு விஷயத்துல நான் இறங்குவனாம்மா?’’

‘‘அப்பறம் எதுக்கு ஜோசப் வந்து உன்னைப் பார்த்தாரு?’’ என்று அமர்த்தலாக ராஜலட்சுமி கேட்க..

உணவு மேஜையின் மீது வெள்ளித் தட்டுக்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்த சந்தியாவிடம் விடுவிடுவென்று சென்ற அபிநயாஅவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்துத் தன் பக்கமாகத் திருப்பி கன்னத்தில் பொளேரென்று அறைந்தாள்.

-தொடரும்

அதிகம் வாசிக்கப்பட்டவை