தூத்துக்குடியில் பயங்கரம்: ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை முன்னாள் போலீஸ்காரர் கைது


தூத்துக்குடியில் பயங்கரம்: ஓய்வு பெற்ற ஆசிரியர் வெட்டிக் கொலை முன்னாள் போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2018 11:30 PM GMT (Updated: 2018-11-04T22:31:59+05:30)

தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முன்னாள் போலீஸ்காரரை, போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி, 
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ்(வயது 59). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சத்யா தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்த பிரான்சிஸ்(52) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இவர் மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று வந்துள்ளார். இவர் திடீரென முன்னால் சென்று கொண்டு இருந்த அந்தோணி துரைராஜின் மோட்டார் சைக்கிள் மீது தனது மோட்டார் சைக்கிளை வைத்து மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறிய அந்தோணி துரைராஜ் கீழே விழுந்தார்.

உடனடியாக பிரான்சிஸ் மோட்டார்சைக்கிளில் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அந்தோணி துரைராஜை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி துரைராஜ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு மக்கள் திரண்டதால், பிரான்சிஸ் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.

உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அந்தோணி துரைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஓய்வு பெற்ற அந்தோணி துரைராஜூம், பிரான்சிஸ் மனைவி அந்தோணி பவுலினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பள்ளியில் வேலை பார்த்து வந்தனர். இதனால் இருவரும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்தனர். அந்தோணி பவுலின் வீட்டுக்கு அவர் அடிக்கடி சென்று வருவாராம்.

இந்த நிலையில் அந்தோணி பவுலின் மகள் ஜெனோ செல்வமோனிசா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு பிரான்சிஸ் மத்திய ரிசர்வ் போலீசில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று ஊருக்கு திரும்பினார். அப்போது தனது மகள் சாவுக்கு அந்தோணி துரைராஜ் தான் காரணம் என்று பிரான்சிஸ் நினைத்தாராம். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்து உள்ளார். அதன்படி நேற்று அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்று வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிசை கைது செய்தனர். இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story