நாகர்கோவிலில் தீபாவளி விற்பனை ‘களை’ கட்டியது கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்


நாகர்கோவிலில் தீபாவளி விற்பனை ‘களை’ கட்டியது கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 5 Nov 2018 4:00 AM IST (Updated: 4 Nov 2018 10:35 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தீபாவளி விற்பனை ‘களை’ கட்டியது. கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நாகர்கோவில்,

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளிகள், இனிப்பு வகைகள் வாங்குவதற்காக நாகர்கோவில் கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் கடைகளில் தீபாவளி விற்பனை ‘களை’ கட்டியது.

அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. செம்மாங்குடி ரோட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் ரோட்டில் வாகனங்கள் செல்வதை கட்டுப்படுத்தும் விதமாக செம்மாங்குடி ரோடு, கேப் ரோட்டில் இணையும் இடத்தில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது.

இதே போல அவ்வை சண்முகம் சாலை, மணிமேடை சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கேப் ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டிகுளம், கோர்ட்டு ரோடு, பார்வதிபுரம், ஆறாட்டு ரோடு, உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கேப்ரோட்டில் அண்ணா விளையாட்டு அரங்கம், அண்ணா பஸ் நிலையம், சவேரியார் கோவில் சந்திப்பு ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்தபடி சென்றன. மேலும் ஆறாட்டு ரோடு மற்றும் அவ்வை சண்முகம் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுக்க முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story