ராமநாதபுரத்தில்: சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


ராமநாதபுரத்தில்: சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:00 PM GMT (Updated: 2018-11-04T23:09:47+05:30)

ராமநாதபுரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட் டது.

ராமநாதபுரம்,

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக தொடர்ந்து பருவநிலை மாறி வருகிறது. இதன்காரணமாக மாவட்டம் முழுவதும் வெயிலின் கொடுமை நீங்கி நல்ல குளுமை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பழமையான வாகை மரம் முறிந்து விழுந்தது. ரோட்டில் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டு விழுந்ததால் அந்த பகுதி வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராமநாதபுரம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள எந்திரத்தை கொண்டு மரத்தினை துண்டுதுண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த பழமையான மரத்தினை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். இதன்காரணமாக நள்ளிரவில் 2 மணி முதல் 6 மணி வரை அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரத்தினை அகற்றும் வரையில் போக்குவரத்தினை காவல்துறையினர் மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர்.

Next Story