நாகையில் தொடர் மழை: மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை


நாகையில் தொடர் மழை: மீனவர்கள் 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 2018-11-05T00:40:21+05:30)

நாகையில் தொடர் மழை காரணமாக 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

நாகப்பட்டினம்,

வடகிழக்கு பருவமழை கடந்த 1-ந் தேதி தொடங்கியது. இதனால் நாகை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கீழையூர், திருமருகல், கீழ்வேளூர், வாய்மேடு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.இந்த நிலையில் நாகையில் நேற்று காலை யில் வெயில் சுட்டெரித் தது. அதைத்தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12 மணி அளவில் சாரல் மழையாக பெய்ய தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக பெய்தது.தொடர்ந்து ½ மணி நேரம் பெய்த மழையால் சாலையோரங்களில் தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது. மேலும், தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.

நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நடவு பணிகள் முடிந்த நிலையில் பயிர்கள் நன்றாக வளர்ந்து வருகின்றன. பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தொடர்மழை காரணமாக பெரும்பாலான மீனவர்கள் 4-வது நாளாக நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் தங்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்று கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Next Story