டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தியேட்டர், தனியார் ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் தியேட்டர், தனியார் ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று ஆய்வு செய்தார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும் தீவிர தொற்று நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவமனைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தினமும் சுத்தப்படுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று சேலத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். அப்போது, அவர் ஆஸ்பத்திரி வளாகத்தினை தூய்மையாக வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுரையின்படி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வருவோருக்கு தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கைகழுவும் பழக்கத்தின் முக்கியத்துவத்தையும், கைகழுவும் முறைகள் தொடர்பான விவரங்களை விளக்கிட வேண்டும் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து சூரமங்கலம் மண்டலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஆய்வு செய்த கலெக்டர் ரோகிணி, கடையின் நுழைவுவாயிலில் உள்ள கண்ணாடிகள், நகரும் படிக்கட்டுகள், துணிகள் வைக்கப்படும் மேஜைகள் ஆகியவற்றை உரிய இடைவெளியில் சுத்தப்படுத்திடுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரிலும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார். அப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தியேட்டருக்கு அதிகளவில் பொதுமக்கள் படம் பார்க்க வருவார்கள் என்பதால் ஒவ்வொரு காட்சிக்கு பிறகும் அனைத்து இருக்கைகள் மற்றும் கைப்பிடிகளை சுத்தம் செய்ய வேண்டும். மேலும், தியேட்டரில் உள்ள மாடி படிகளின் கைப்பிடிகள், நுழைவுச்சீட்டு வழங்குமிடம், கேண்டின் ஆகிய பகுதிகளில் தினமும் சுத்தப்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக தனியார் ஆஸ்பத்திரி, ஜவுளிக்கடை மற்றும் தியேட்டரில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு முறைகள் மற்றும் கை கழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை கலெக்டர் ரோகிணி, பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒட்டினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாநகர் நல அலுவலர் பார்த்திபன், சேலம் தெற்கு தாசில்தார் தீபசித்ரா, சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story