அ.தி.மு.க.வை பற்றி பேச தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை மதுசூதனன் பேட்டி


அ.தி.மு.க.வை பற்றி பேச தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை மதுசூதனன் பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2018 5:15 AM IST (Updated: 5 Nov 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வை பற்றி பேச தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை என அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்தார்.

திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்காக வடசென்னை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 3 சக்கர சைக்கிள்கள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார். மத்திய சென்னை எம்.பி. விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

விழாவில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் பங்கேற்று 3 சக்கர சைக்கிள்கள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை வழங்கி ஸ்லீப்பர் செல்களாக செயல்பட்டு வருகின்றனர்.

இனிமேல் தினகரனால் அ.தி.மு.க.வில் ஸ்லீப்பர் செல்களை உருவாக்க முடியாது. ஏனென்றால் தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் எங்களுடன் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைதேர்தலில் நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.வை பற்றி பேச தினகரனுக்கு எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அவர் கட்சியில் உறுப்பினராக கூட இல்லை. அ.தி.மு.க. பொதுமக்களுக்கு ஏராளமான நல உதவித் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

பொதுமக்களும் எங்கள் மீது நம்பிக்கையுடன் உள்ளனர். ஆகவே வருகிற இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story