குமரி மாவட்டத்தில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு


குமரி மாவட்டத்தில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 10:22 PM GMT)

குமரி மாவட்டத்தில் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருப்பதால், கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள், மலையோர பகுதிகளிலும் மழை பெய்கிறது. மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் பல்வேறு இடங்களில் பெய்த மழைகளில், அதிகபட்சமாக மயிலாடியில் 19.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்- 8, பூதப்பாண்டி- 4, பாலமோர்- 6.2, கொட்டாரம்- 4.2, நிலப்பாறை- 15.8, இரணியல்- 2.2, ஆனைகிடங்கு- 4, குளச்சல்- 4, அடையாமடை- 2, கோழிப்போர்விளை- 5, முள்ளங்கினாவிளை- 13, புத்தன்அணை- 12 என்ற அளவில் மழை பெய்திருந்தது. இதுபோன்று அணைப் பகுதிகளில் பேச்சிப்பாறை- 18.2, பெருஞ்சாணி- 11.8, சிற்றார் 1- 18.6, சிற்றார் 2- 13, மாம்பழத்துறையாறு- 6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

குமரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 700 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 1531 கனஅடி தண்ணீர் வருகிறது. இதே போல 431 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 825 கனஅடி தண்ணீர் வருகிறது.

மேலும் சிற்றார் 1 அணைக்கு 209 கனஅடி தண்ணீரும், பொய்கை அணைக்கு 10 கனஅடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 43 கனஅடி தண்ணீரும் வந்துகொண்டிருக்கிறது.

Next Story