தாராபுரம் பகுதியில் முயல் வேட்டையாடிய 6 பேர் கைது வனத்துறையினர் நடவடிக்கை
தாராபுரம் பகுதியில் முயல் வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
காங்கேயம்,
தாராபுரம் அருகே உள்ள அம்மாபட்டி பகுதியில் சிலர் முயல்வேட்டையாடுவதாக காங்கேயம் வனச்சரக அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அதிகாரி மாரிமுத்து உத்தரவின் பேரில் காங்கேயம் வனசரக அலுவலர் மகேஷ் தலைமையில் வனவர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் தாராபுரம் அம்மாபட்டி பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் சாக்குமூடைகள் வைத்து இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி, சாக்குமூடையின் கட்டுகளை அவிழ்த்து திறந்து பார்த்தனர். அப்போது அவற்றில் முயல்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடி அவற்றை சாக்குமூடையில் கட்டி தாராபுரத்தில் விற்பனைக்காக கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து முயல் வேட்டையாடியதாக பழனியை சேர்ந்த சுரேஷ் (வயது 32), பிரபு (32), சக்கரவர்த்தி (38), ரமேஷ் (33), சரண்ராஜ் (28) மற்றும் சசி (24) ஆகிய 6 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர். அபராத தொகை கட்டிய பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் அந்த மூடைகளில் மொத்தம் 33 முயல்கள் இருந்தன. அவற்றில் 13 முயல்கள் செத்து கிடந்தன. உயிருடன் இருந்த மற்ற முயல்களை அவினாசி மற்றும் ஊதியூர் பகுதி காடுகளில் வனத்துறையினர் விட்டனர்.
Related Tags :
Next Story