அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்


அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 5 Nov 2018 5:00 AM IST (Updated: 5 Nov 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திறந்து வைத்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர், ஆசிரியர் கழக பங்களிப்புடன் ரூ. 60 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபாகர், பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு, புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து, விழாவில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்து. விளையாட்டு துறைக்கு முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தந்ததையடுத்து, நமது விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், நபார்டு திட்டத்தின் கீழ், இந்த பள்ளிக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஊக்குவிக்க வேண்டும். மாணவ, மாணவிகளும் நல்ல முறையில் படித்து, முன்னேற்றம் அடைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதில், மாவட்ட கல்வி அலுவலர் சுப்பிரமணி, துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி, முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சிட்டிஜெகதீசன், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நாராயணன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அசோகா, நாராயணரெட்டி மற்றும் கட்சியினரும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரிய, ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story