சிறுவன் இறந்த வழக்கில் திடீர் திருப்பம்: ‘தனிக்குடித்தனத்திற்கு கணவர் மறுத்ததால் 2 குழந்தைகளையும் கொன்றேன்’ - கைதான தாய் பரபரப்பு வாக்குமூலம்
தனிக்குடித்தனத்திற்கு கணவர் மறுத்ததால் 2 குழந்தைகளையும் கொன்றதாக கைதான தாய் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-
வளவனூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா காட்டுபுத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவர் புதுச்சேரி மாநிலம் வடமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயசித்ரா(30). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிகிறது. இவர்களுக்கு மிதுன்(4½) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைக்குழந்தை லட்சன் ஒரு பாத்திரத்தில் இருந்து தண்ணீரில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகனுடன் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே பனங்குப்பம் என்ற கிராமத்திற்கு சென்று ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு குடியேறினார். மேலும் அதே கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மிதுன் எல்.கே.ஜி. படித்து வந்தான்.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி சிலம்பரசன் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் அவர், தான் வேலை பார்த்து வரும் நிறுவனத்தில் இருந்து ஜெயசித்ராவிற்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பலமுறை போன் செய்தும் எடுக்காததால் உடனடியாக சிலம்பரசன் காட்டுபுத்துப்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர்களான கலியமூர்த்தி, மீனாட்சி ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு பனங்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று பார்க்கும்படி கூறினார்.
இதையடுத்து கலியமூர்த்தியும், மீனாட்சியும் பனங்குப்பத்திற்கு வந்தனர். அங்கு சிலம்பரசனின் வீட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டில் ஜெயசித்ரா இல்லை. ஆனால் மிதுனின் புத்தகப்பை இருந்தது. உடனே மிதுனை அவர்கள் இருவரும் தேடிப்பார்த்தனர்.
அப்போது வீட்டின் பின்புறமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் மிதுன் கிடந்தான். இதை பார்த்து பதறிய அவர்கள் மிதுனை மீட்டு வளவனூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே மிதுன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சிலம்பரசன், வளவனூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் ‘சந்தேக மரணம்’ என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் எப்படி இறந்தான் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தலைமறைவான சிறுவனின் தாய் ஜெயசித்ராவை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதுசம்பந்தமாக ஜெயசித்ரா எதனால் மனநிலை பாதிக்கப்பட்டார், எவ்வளவு நாட்களாக இதுபோன்ற நிலைமையில் உள்ளார்? என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயசித்ராவிற்கு 2-வது குழந்தை பிறந்த சில மாதங்களில் மனநிலை பாதிப்புக்கு உள்ளானது தெரிந்தது.
இதனிடையே ஜெயசித்ரா, வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது கையில் செல்போனை எடுத்துச்சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ‘சைபர் கிரைம்’ போலீசாரின் உதவியுடன் ஜெயசித்ரா வைத்திருந்த செல்போன் எண் மூலம் அவர் இருக்கும் இடத்தை வளவனூர் போலீசார் கண்டறிந்தனர். அப்போது ஜெயசித்ரா, திருவண்ணாமலையிலும், அங்கிருந்து மேல்மருவத்தூருக்கும் சென்று அங்குள்ள பகுதியில் சுற்றி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார், நேற்று மேல்மருவத்தூருக்கு விரைந்து சென்று அங்கிருந்த ஜெயசித்ராவை பிடித்து வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது அவர் போலீசில் கூறியதாவது:-
நாங்கள் பண்ருட்டி அருகே காட்டுபுத்துப்பாளையத்தில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம். தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று எனது கணவரிடம் நான் வற்புறுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு வந்தது. நிம்மதியாக தூங்க முடியவில்லை. அந்த சமயத்தில் எனக்கு அதிகமாக வெறுப்பு ஏற்பட்டு எனது கைக்குழந்தையை ‘அண்டாவில்’ இருந்த தண்ணீருக்குள் அமுக்கி கொன்றேன். அதன்பிறகு நாங்கள் வளவனூர் அருகே பனங்குப்பத்துக்கு சென்று வசித்து வந்தோம். அங்கு மாமனார், மாமியாரை எனது கணவர் எங்களுடனேயே அழைத்து வந்தார். இதனால் எனக்கு மேலும் மன அழுத்தம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட அதிக வெறுப்பால் மிதுனையும் தண்ணீர் தொட்டிக்குள் தூக்கி போட்டு அமுக்கி கொன்றேன் என்றார்.
இதை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். பின்னர், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜெயசித்ராவை கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story