விருத்தாசலம் அருகே பரபரப்பு: காதலனுடன், பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவருடன் வாழ பிடிக்காததால் பரிதாபம்


விருத்தாசலம் அருகே பரபரப்பு: காதலனுடன், பெண் தூக்குப்போட்டு தற்கொலை - கணவருடன் வாழ பிடிக்காததால் பரிதாபம்
x
தினத்தந்தி 5 Nov 2018 3:30 AM IST (Updated: 5 Nov 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே கணவருடன் சேர்ந்து வாழப்பிடிக்காத இளம் பெண் அவரது காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கம்மாபுரம், 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது மேற்கிருப்பு கிராமம். இங்குள்ள ஒரு முந்திரிதோப்பில் உள்ள மரத்தில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபரும், 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஊ.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் போலீசார் முந்திரி தோப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

இதையடுத்து, 2 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர்கள் கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த ராமநாதன் மகன் ராம்குமார்(வயது 22) என்ஜினீயர். அதே பகுதியை சேர்ந்த தேவஸ்ரீ(19) என்பதும், தேவஸ்ரீ சமீபத்தில் திருமணமானவர் என்பதும் தெரியவந்தது.

ஆனால் இருவரும் ஒரே ஊராக இருந்ததால் அவர்கள் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அதன்பேரில் போலீசார் நடத்தி விசாரணையில் வெளியான விவரம் வருமாறு:-

ராம்குமாரும், தேவஸ்ரீயும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்களது காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கும் தெரியாது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேவஸ்ரீக்கு அவரது பெற்றோர் கீரப்பாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி திருமணம் செய்து வைத்தனர். ஆனால் இந்த திருமணத்தை ஏற்க முடியாமல் தனது காதலன் ராம்குமாரின் நினைப்பிலேயே தேவஸ்ரீ இருந்து வந்துள்ளார். இதனால் புதுமண தம்பதிகளிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் 21-ந்தேதி தேவஸ்ரீ தனது கணவர் வீட்டைவிட்டு வெளியேறி காதலன் ராம்குமாருடன் தலைமறைவானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், பெற்றோர், உறவினர்கள் தேவஸ்ரீயை தேடி அலைந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதற்கிடையே தேவஸ்ரீ, ராம்குமார் சென்னையில் தங்கி வாழ்க்கை நடத்தி வந்தனர். தேவஸ்ரீயை காணவில்லை என்ற புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் அவரை தேடும் விவரம் அவர்களுக்கு தெரியவந்தது.

இதனால் போலீசுக்கு பயந்து விருத்தாசலம் அருகே மேற்கிருப்பில் உள்ள ராம்குமாரின் பாட்டி வீட்டுக்கு 2 பேரும் வந்தனர். இருவரும் சுமார் 1½ மாதமாக சென்னையில் வசித்துவிட்டு வந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த ராம்குமாரின் பாட்டி மற்றும் உறவினர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த தேவஸ்ரீயும், ராம்குமாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இருப்பினும் இது குறித்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரும் தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான பிறகு காதலனுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story