புஞ்சைபுளியம்பட்டியில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு


புஞ்சைபுளியம்பட்டியில் மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 5 Nov 2018 3:45 AM IST (Updated: 5 Nov 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டியில் மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி, 

பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் குமார் என்கிற பண்ணாரி (வயது 33). இவர் திருப்பூர் மாவட்டம் அன்னூரில் உள்ள ஒரு விசைத்தறிக்கூடத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பண்ணாரி நேற்று மாலை தனது வீட்டில் இருந்து அன்னூருக்கு வேலைக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

புஞ்சைபுளியம்பட்டி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே சென்றபோது பண்ணாரியின் மோட்டார்சைக்கிளும் எதிரே வந்த காராப்பாடியை சேர்ந்த சிவராமன் என்பவரது மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் பண்ணாரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பண்ணாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிவராமன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்த பண்ணாரிக்கு சங்கீதா (27) என்ற மனைவியும், சுப்பிரமணி (6), ரஞ்சித் (1½) ஆகிய 2 மகன்களும் உள்ளார்கள். பண்ணாரியின் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story