குற்றச் செயலை தடுக்க கடைவீதிகளில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் ரோந்து


குற்றச் செயலை தடுக்க கடைவீதிகளில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் ரோந்து
x
தினத்தந்தி 5 Nov 2018 12:00 AM GMT (Updated: 4 Nov 2018 11:29 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேரு வீதியில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

புதுச்சேரி,

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலில் குற்றச்செயலை தடுக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநகரில் உள்ள கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த கூட்ட நெரிசலை சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி குற்றச்செயல்களை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் புதுச்சேரி நேரு வீதிக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா திடீரென வந்தார். நேரு வீதி முழுவதும் ரோந்து சென்று தீபாவளி பண்டிகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து காந்திவீதி சந்திப்புக்கும் சென்று பார்வையிட்டார். அவருடன் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், முருகன் மற்றும் போலீசார் பலர் உடன் சென்றனர்.

அப்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் எடுத்த நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ள உத்தரவிட்டார். குறிப்பாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதில் மாற்றங்களை அமல்படுத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க புதுச்சேரி நேரு வீதியில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) முடிய மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை புதுச்சேரி நேரு வீதியில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேரு வீதியில் நிறுத்தப்படும் 4 சக்கர வாகனங்களை மதியம் 2 மணிக்கு முன்னதாக அங்கிருந்து எடுத்துவிட வேண்டும். 4 சக்கர வாகனங்களின் நேருவீதிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பழைய சிறைச்சாலை வளாகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

இந்த வாகனங்கள் அனைத்தும் கொசக்கடை வீதி வழியாக சென்று பழைய சிறைச்சாலை வளாகத்திற்கு செல்ல வேண்டும். மீண்டும் அந்த வழியாகவே வெளியேற வேண்டும். மேலும் ஒரு தற்காலிக வாகன நிறுத்தம் அண்ணாதிடலில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை காந்தி வீதியில் காமாட்சியம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் இருந்து இருந்து அன்னை தெரசா வீதி சந்திப்பு வரை வாகன போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story