எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு - மாவட்டத்தில் 3,831 பேர் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு - மாவட்டத்தில் 3,831 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 5 Nov 2018 3:30 AM IST (Updated: 5 Nov 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்டத்தில் 3,831 பேர் எழுதினர்.

கடலூர், 


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவ, மாணவிகள் தங்களது மேற்படிப்பை தொடரும் வகையில் மத்திய அரசு கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது. இதற்கென இவர்களிடையே திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வுக்காக 4 ஆயிரத்து 178 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு கடலூர் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி, பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக்பள்ளி, விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திட்டக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 14 மையங்களில் தேர்வு நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு தேசிய திறனாய்வு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு 2 பிரிவுகளில் நடந்தது. காலை 9 மணிக்கு அறிவு திறன் தேர்வு தொடங்கி 11 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் 30 நிமிடம் இடைவேளைக்கு பிறகு 11.30 மணிக்கு கல்வி திறன் தேர்வு நடந்தது. இந்த தேர்வு மதியம் 1.30 மணிக்கு முடிந்தது.

இந்த தேர்வுகளை மாவட்டம் முழுவதிலும் உள்ள 14 மையங்களில் 3 ஆயிரத்து 831 பேர் எழுதினர். 347 பேர் தேர்வு எழுத வரவில்லை.

முன்னதாக தேர்வர்கள் காலை 8 மணிக்கே தங்களுடைய தேர்வு மையங்களுக்கு வந்தனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், வடலூர் ஆகிய கல்வி மாவட்ட அலுவலர்களும் தங்கள் பகுதிக்குட்பட்ட தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, ஆராய்ச்சி படிப்பு வரை ஆண்டுதோறும் மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி தெரிவித்தார்.

Next Story