சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது; சிறுமி பலி - பெற்றோர், சகோதரர் படுகாயம்


சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது; சிறுமி பலி - பெற்றோர், சகோதரர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Nov 2018 3:15 AM IST (Updated: 5 Nov 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்துபோனாள். உடன் வந்த பெற்றோர், சகோதரர் படுகாயம் அடைந்தனர்.

திருமங்கலம், 


திருப்பூர் மாவட்டம், கோயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகையா(வயது 48). இவர் திருப்பூரில் நூற்பாலை வைத்துள்ளார். இவருடைய மனைவி ஜெனிதா(40). இவர்களுக்கு அபிஷேக்(11) என்ற மகனும், ஹரிணி(8) என்ற மகளும் உண்டு. இதில் அபிஷேக் 6-ம் வகுப்பும், ஹரிணி 3-ம் வகுப்பும் படித்தனர். முருகையா, தனது மனைவி, குழந்தைகளுடன் நெல்லையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக காரில் திருப்பூரில் இருந்து புறப்பட்டனர். காரை முருகையா ஓட்டிச் சென்றார்.

திருமங்கலம் அருகே உள்ள கரிசல்பட்டி நான்கு வழிச்சாலை பகுதியில் கார் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. மேலும் கார் சாலையின் மறுபக்கம் தலை குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கிய ஹரிணி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனாள். அபிஷேக் பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். முருகையா, ஜெனிதாவும் படுகாயம் அடைந்தனர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அபிஷேக் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story