தீபாவளி பண்டிகையையொட்டி: தேனி கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகையையொட்டி: தேனி கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:00 AM IST (Updated: 5 Nov 2018 10:16 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி தேனி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தேனி,

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரங்கள் இவை மூன்றும் தவிர்க்க முடியாதவையாகி விட்டன. அந்த வகையில் புத்தாடை வாங்கவும், பலகாரங் கள், பட்டாசுகள் வாங்கவும் கடந்த சில நாட்களாகவே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டு வந்தன.

தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று தேனி நகரில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. காலையில் இருந்தே கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக பகவதியம்மன் கோவில் தெரு, எடமால் தெரு மற்றும் மதுரை சாலையில் மக்கள் கூட்டம் தேனீக்களாய் மொய்த்தது.

ஜவுளிக்கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அதேபோல் பேக்கரி கடைகள், மளிகை கடைகள், வீட்டுஉபயோக பொருட்கள் விற்பனை கடைகள், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து பொருட் களை வாங்கிச் சென்றனர்.

மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் தேனி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நூற்றுக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேனி காமராஜர் பஸ் நிலையம், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம் ஆகிய 2 பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் இடம் பிடிக்க மக்களிடம் கடும் போட்டி காணப்பட்டது. இருக்கைகளில் இடம் கிடைக்காமல் பலரும் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

Next Story