பிரம்மதேசம் அருகே: அம்மன் கோவிலில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


பிரம்மதேசம் அருகே: அம்மன் கோவிலில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Nov 2018 10:00 PM GMT (Updated: 5 Nov 2018 5:34 PM GMT)

பிரம்மதேசம் அருகே அம்மன் கோவிலில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரம்மதேசம், 

பிரம்மதேசம் அருகே உள்ள முருக்கேரியில் வேங்கடத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

பின்னர் நேற்று காலை பாலசுந்தரம் வழக்கம் போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியலை காணவில்லை. மேலும் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் கோவில் முன்பு இருந்த உண்டியலை உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தை திருடியுள்ளனர்.

பின்னர் கோவில் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையையும் திருடிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. உண்டியலில் ரூ.20 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் நகை-பணம் திருடுபோன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story