திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்து, மாசு, ஒலி இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்


திருவள்ளூர் மாவட்டத்தில் விபத்து, மாசு, ஒலி இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 6 Nov 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

விபத்து, மாசு, ஒலி இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவோம் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. மாசில்லாத சுற்றுச்சூழலை பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடைமையும், பொறுப்பும் ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள், குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்கவேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கவும்.

மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

இந்த தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் விபத்து இல்லாத மற்றும் மாசில்லா தீபாவளியாக கொண்டாடுவோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விழிப்புணர்வு பிரசாரம்

கும்மிடிப்பூண்டி பஜாரில் விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அதே போல ஆரம்பாக்கத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

திருத்தணியில் உள்ள சோளிங்கர் சாலை சந்திப்பில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் நிவாசன், பரந்தாமன் மற்றும் போலீசார் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களிடம் விபத்து, மாசு இல்லா தீபாவளியை கொண்டாடும்படி வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Next Story