அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை போராட்டம்


அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில் தவறி விழுந்து தொழிலாளி பலி இழப்பீடு கேட்டு உறவினர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 6 Nov 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

அல்ட்ராடெக் சிமெண்டு ஆலை தொழிலாளி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து பலியானார். இழப்பீடு கேட்டு உறவினர்கள் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம் முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் விஸ்வநாதன் (வயது 24). இவர் வி.கைகாட்டி அடுத்துள்ள ரெட்டிப்பாளையத்தில் அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையில், ஒப்பந்த அடிப்படையில் வெல்டிங் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆலைக்கு விஸ்வநாதன் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வெல்டிங் செய்ய உயரமான கட்டிடத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி அவர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கு உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விஸ்வநாதனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறந்த விஸ்வநாதன் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தர வேண்டும். பணி செய்யும் இடத்தில் உரிய பாதுகாப்பு வசதிகளை ஆலை நிர்வாகம் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி அல்ட்ராடெக் சிமெண்டு ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு செல்லும் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து விக்கிரமங்கலம், கயர்லாபாத், உடையார்பாளையம் போலீசார் மற்றும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், அரியலூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி, அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story