மாவட்டத்தில் 2,800 பெண்களுக்கு மானியத்தில் தலா 50 கோழிக்குஞ்சுகள் - விண்ணப்பிக்க 20-ந்தேதி கடைசி நாள்


மாவட்டத்தில் 2,800 பெண்களுக்கு மானியத்தில் தலா 50 கோழிக்குஞ்சுகள் - விண்ணப்பிக்க 20-ந்தேதி கடைசி நாள்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 6 Nov 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 800 பெண்களுக்கு மானியத்தில் தலா 50 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.

திண்டுக்கல், 

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 200 பயனாளிகளுக்கு மானியத்தில் கோழிக் குஞ்சுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் 77 ஆயிரம் பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் தலா 50 அசில் ரக கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 200 பயனாளிகள் வீதம் 2 ஆயிரத்து 800 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 வார வயதுடைய 50 அசில் ரக கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும். இதற்காக திண்டுக்கல் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே பயனடைய முடியும். மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏழ்மைநிலையில் உள்ளவராக இருக்க வேண்டும். அந்தந்த ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு கிராமத்தில் நிலையான முகவரியில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் விலையில்லா கறவைப்பசுக்கள் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்தவராக இருக்க கூடாது. விதவைகள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான பெண் பயனாளிகள் தங்களது கிராமத்துக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரிடம் வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

Next Story