அய்யலூர் சந்தையில் தக்காளி விலை இரு மடங்கு உயர்வு
அய்யலூர் சந்தையில் தக்காளி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடமதுரை,
வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி சந்தை உள்ளது. இங்கிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு பெட்டிகளில் அடைத்து நேர்த்தியாக தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 4 டன் வரை தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இதனால் மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் சந்தையாக அய்யலூர் சந்தை உள்ளது. கடந்த சில நாட்களாக அய்யலூர் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்தது. 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.100 முதல் ரூ.120 வரையே விற்பனை செய்யப்பட்டது.
இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.6 முதல் ரூ.8 வரையே விவசாயிகளுக்கு விலை கிடைத்தது. செடிக்கு தண்ணீர் பாய்ச்சி, உரம் போட்டு, வாகனம் மூலம் சந்தைக்கு கொண்டு வரும் கூலி கூட அவர்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்தநிலையில் தற்போது தீபாவளி பண்டிகையொட்டி தக்காளி வாங்க வியாபாரிகள் குவிந்தனர். இதன்காரணமாக தக்காளி விலை இரு மடங்கு உயர்ந்தது. நேற்று அய்யலூர் சந்தையில் 15 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ஒன்று ரூ.250 வரை ஏலம் போனது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story