பெருந்துறை அருகே வாகன சோதனை : சாலை வரி கட்டாத ஆம்னி பஸ் பறிமுதல் - விதிமீறியவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம்


பெருந்துறை அருகே வாகன சோதனை : சாலை வரி கட்டாத ஆம்னி பஸ் பறிமுதல் - விதிமீறியவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 6 Nov 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே நடந்த வாகன சோதனையில் சாலை வரி கட்டாமல் இயங்கிய ஆம்னி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் போக்குவரத்து விதியை மீறியவர்களிடம் ரூ.4 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

பெருந்துறை, 


பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை மற்றும் சரளை அருகே உள்ள சுங்க சாவடியில் கடந்த 4 நாட்களாக தீவிர வாகன சோதனை நடந்தது. ஈரோடு மண்டல போக்குவரத்து துணை ஆணையாளர் நெல்லையப்பன் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்ணன்( ஈரோடு கிழக்கு), ரகுபதி (ஈரோடு மேற்கு), பழனிவேல் (கோபி), வெங்கட்ரமணி (பெருந்துறை), ரங்கநாதன் (பறக்கும் படை) ஆகியோருடன் போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டார்கள்.

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்தது, அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றது, சரக்கு வாகனத்தில் அதிகமாக பாரம் ஏற்றிச்சென்றது என போக்குவரத்து விதிகளை மீறிய மொத்தம் 165 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்தந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் வரியாக ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது.

இது தவிர கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பஸ் ஒன்றை போக்குவரத்து அதிகாரிகள் வழி மறித்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த பஸ் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் சாலை வரி கட்டாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆம்னி பஸ்சை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் அந்த பஸ் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story