மும்பையில் தந்தேராஸ் கொண்டாட்டம் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


மும்பையில் தந்தேராஸ் கொண்டாட்டம் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 6 Nov 2018 4:45 AM IST (Updated: 6 Nov 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நேற்று தந்தேராஸ் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மும்பை, 

மராட்டியத்தில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் செல்வத்தின் கடவுள்களாக போற்றப்படும் மகாலட்சுமியையும், குபேரனையும் வணங்குவது வழக்கம்.

இந்த நாளில் தங்கம் வாங்கினால் அது பல்கிப் பெருகும் என்று நம்பப்படுகிறது. எனவே தந்தேராஸ் தினமான நேற்று மும்பை, தானே உள்ளிட்ட மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் தங்கநகைகள் வாங்க ஆர்வம் காட்டினார்கள்.

நகைக்கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து வாங்கி மகிழ்ந்தனர்.

கடைகளில் கூட்டம்

தந்தேராஸ் கொண்டாட்டத்தையொட்டி தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று மும்பையில் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,110-க்கும், 8 கிராம் தங்கம் 24 ஆயிரத்து 880-க்கும், 10 கிராம் தங்கம் 31 ஆயிரத்து 100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

தீபாவளி பண்டிகையையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) நரகசதுர்த்தசி கொண்டாடப்படுகிறது. நாளை பெரிய தீபாவளி எனப்படும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது. வருகிற 8-ந் தேதி கோவர்த்தண பூஜையும், 9-ந்தேதி பாவ் பீஜ் தினமும் கொண்டாடப்படுகிறது. மும்பையில் தமிழர்கள் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

Next Story