தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: புதுச்சேரி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி பண்டிகையையொட்டி புதுவை மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (செவ்வாய்க்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, புதுச்சேரி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நமச்சிவாயம்
புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
நம் பாரத தேசத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஒருசேர கொண்டாடி மகிழும் இன்பதிருநாளாக தீபாவளி பண்டிகை திகழ்ந்து வருகிறது. துன்பம் என்னும் இருள் அகல இன்பம் என்னும் தீபம் ஏற்றி எல்லோருக்கும் ஒளிமயமான வாழ்க்கை அமைய இறைவனை வேண்டி தீப ஒளி திருநாளை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம். இந்நன்னாளில் வறியவர்களுக்கு கொடுத்து மகிழ்வோம்.
வருங்கால பாரதம். வளமாக பாரதமாக திகழ, நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ, இளைய சமுதாயத்தின் கனவுகள் மெய்ப்பட, அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாய் வாழ்ந்திட, மதங்களை மறந்து, மனித நேயம் வளர்த்திட, புதுச்சேரி மாநிலம் புது பொலிவு பெற எல்லாம்வல்ல இறைவன் பேரருள் புரிய வேண்டும். அனைவருக்கும் எனது இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
ரங்கசாமி
புதுவை முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தீபாவளி திருநாள் இருள் நீங்கி ஒளிபரப்பும் நன்னாள்.
வரும் காலங்களில் தங்களின் வாழ்வில் செழிப்பும், மனதில் மகிழ்ச்சியும் ஏற்பட்டு அனைவரும் வளமான வாழ்வுபெற்று ஒளிமயமான எதிர்காலம் அமைந்திட வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டி எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ரங்கசாமி கூறியுள்ளார்.
கோகுலகிருஷ்ணன் எம்.பி.
கோகுலகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் அனைத்துப்பிரிவு மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தீபாவளி திருநாள். இந்திய ஒருமைப்பாட்டின் பெருமிதத்தின் வெளிப்பாடு என்று கூறலாம். ஒவ்வொரு இல்லத்தாரும் புத்தாடை அணிந்து புதுப் பலகாரங்கள் செய்து, இறைவனை வழிபடும்போது தீமைகளின் சின்னத்தை இறைவன் வென்று அகற்றிய நிகழ்ச்சியை பெருமையுடன் நினைவு கொள்வார்கள். அத்துடன் தங்கள் வாழ்விலும் தீமைகளை எதிர்த்து போரிடவும் நன்மைகளை மகிழ்ச்சியுடன் வரவேற்கவும் உறுதி கொள்வார்கள்.
சாதி, இன, மொழி வேறுபாடுகளை களைந்து மகிழ்ச்சி பொங்கும் இத்தருணத்தில் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கும் பொங்கும் ஒளிவெள்ளம்போல் மக்கள் வாழ்வில் நலமும், வளமும் பொங்கிட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கோகுலகிருஷ்ணன் எம்.பி. கூறியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் எம்.பி.
ராதாகிருஷ்ணன் எம்.பி. விடுத்துள்ள செய்தியில், மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து சமத்துவம், சகோதரத்துவம் போற்றும் இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகிட அனைவரது இல்லங்களிலும் தீமை என்னும் இருள் அகற்றி நன்மை என்னும் ஒளியை ஏற்றி மகிழ்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்பழகன் எம்.எல்.ஏ.
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், மக்களிடையே சாதி, மத, வேறுபாடுகளை மறந்து அறியாமையை நீக்கி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர பாசத்துடன் அன்பை பறிமாறிக்கொள்ளும் நன்னாளாகும். தமிழகத்தில் ஜெயலலிதாவின் நல்லாட்சி போன்று புதுச்சேரியிலும் கழக ஆட்சி மலர கழகத்தினர் அனைவரும் இந்நன்னாளில் சபதமேற்போம் என்று கூறியுள்ளார்.
சிவா எம்.எல்.ஏ.
புதுவை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இருள் அகற்றி ஒளிவீசும் தீப ஒளிகளின் வரிசையை தீபாவளி என்று நாம் அழைக்கின்றோம். இந்த இனிய நன்னாளில் இருள் அகற்றி ஒளிவீசும் கதிரவன்போல் மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் தீமை நீங்க அன்பு பாராட்டி, மனித நேயத்தை மலர செய்யவேண்டும் என்று என் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.
தமிழின தலைவர் தலைவரின் நல்லாசியோடு கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிநின்று எல்லோரும் எல்லாம்பெற்று மகிழ்வோடு வாழ்வதற்கு என் பணி என்றும் தொடர்ந்திடும் என்று இந்நாளில் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சாமிநாதன் எம்.எல்.ஏ.
பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள செய்தியில், பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களைப்போல் புதுச்சேரி மக்களுக்கும் மத்திய அரசின் அனைத்து ஏழை மக்கள் நலத்திட்டங்கள் சென்றடையவேண்டும். பிரதமரின் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு சொந்தவீடு திட்டம் பாரதீய ஜனதா ஆளும் மாநிலங்களில் தடையின்றி பொதுமக்களை சென்றடையும் நிலையில் மத்திய அரசு திட்டங்களுக்கு புதுச்சேரி அரசால் தடைபோடப்பட்டு அதனால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் ஏழை, எளிய மக்களின் துன்ப இருள் விலகி இன்ப ஒளி காணவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஓம்சக்தி சேகர்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் விடுத்துள்ள செய்தியில், மக்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் இருள் அகன்று ஒளி சிறக்கவும், துயர் அகன்று மகிழ்ச்சி நிலைக்கவும் இத்தீபாவளி திருநாளில் ஆயிரம் தீபங்கள் ஒளிரட்டும் என வாழ்த்துகிறேன். நன்கு மழை பெருகி வளஞ்சிறக்கவும் புத்தாடை அணிந்து மனம் களிக்கவும், புதுவை மக்கள், உழவர் பெருமக்கள், தொழிலாள தோழர்கள் அனைவரும் தீப திருநாளினை மகிழ்வுடன் கொண்டாடவும் உலகம் போற்றும் உன்னத தாய் ஜெயலலிதாவின் அருளாசியோடு மரியாதைக்குரிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆசியோடு என் உளங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் வேல்முருகன் விடுத்துள்ள செய்தியில், தீமை அழிந்து நல்லவை மலர்ந்ததற்காக கொண்டாடப்படுவதுதான் தீபாவளி பண்டிகை. டி.டி.வி. தினகரன் தலைமையில் வஞ்சகம், துரோகம், என்னும் பல தீய சக்திகளை வீழ்த்தி, சாதி, சமயம், ஏற்ற தாழ்வுகளை நீக்கி சமதர்ம சமுதாயத்துடன் நல்லாட்சி அமைந்திட இந்நன்னாளில் உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆனந்து, இந்து முன்னணி தலைவர் சனில்குமார் ஆகியோரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story