அதிக அளவில் பட்டாசுகள் வைத்திருந்த 2 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை போலீசார் நடவடிக்கை


அதிக அளவில் பட்டாசுகள் வைத்திருந்த 2 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2018 10:15 PM GMT (Updated: 5 Nov 2018 9:34 PM GMT)

தர்மபுரியில் விதிமுறையை மீறி அதிக அளவில் பட்டாசுகளை வைத்திருந்த 2 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்தனர்.

தர்மபுரி,

தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடைகளில் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பட்டாசுகளை இருப்பு வைக்க வேண்டும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மணல், தண்ணீர் ஆகியவற்றை கடைகளில் போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தர்மபுரி டவுன் போலீசார், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் தர்மபுரி நகர பகுதியில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பட்டாசு கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? பாதுகாப்பு கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்தனர்.

இந்த சோதனையின்போது பென்னாகரம் ரோடு, நேதாஜி பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் 2 பட்டாசு கடைகளில் விதிமுறையை மீறி அதிக அளவில் பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 2 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய உயர் அதிகாரிகளுக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

இதுதொடர்பாக சோதனை நடத்திய போலீசார் கூறுகையில், பட்டாசு கடைகளில் பின்பற்ற வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்தாத பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. அதன்அடிப்படையில் விதிமுறைகளை மீறிய 2 கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.


Next Story